தமிழ்தேசிய எழுச்சிக்காய் விக்னேஸ்வரன் திறந்திருக்கும் புதிய பாதை!

samakaalam
samakaalam

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாயிலாக தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களை தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர். மக்களில் பிழை, மக்கள் தவறாக வாக்களித்து விட்டார்கள் என்று சில அரசியல்வாதிகள் கருத்து கூறி வரும் நிலையும் காணப்படுகின்றது. ஆனால் மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பு என்ற வாசகத்திற்கு அமைய மக்கள் மிகச் சிறந்த ஆணையை வழங்கியுள்ளார்கள். அதனை முதலில் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்த வகையில் வடக்கின் முன்னாள் முதல்வரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் புதிய சேதி ஒன்றை பிரகடனம் செய்துள்ளனர்.

உண்மையில் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் வெற்றி என்பது மாற்று தமிழ்தேசியப் பயணத்திற்கான வலுவான அடித்தளமாகும். அதற்கான சிறந்த சமிக்ஞையாக விகினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவைக் குறிப்பிடலாம். ஒரு ஆசனத்தை பெற்றவர்கள் வெற்றி என கருதலாமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் எப்படியான சூழலில் எதற்காக இந்த ஆசனத்தை மக்கள் வழங்கியுள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதுவே மக்களின் ஆணையையும் அவர்தம் மனநிலையையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

விக்னேஸ்வரன் அவர்கள், பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். தென்னிலங்கையில் மாத்திரமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பால் மாத்திரமின்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்பால்கூட மிக கடுமையான அவதூறு பரப்பல்கள், சதிகளுக்கு மத்தியிலேயே இந்த ஆசனம் பெறப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் விக்னேஸ்வரனை பிரபாகரனாக சித்திரிக்கும் முயற்சியில் சிங்களப் பேரினவாதிகள் ஈடுபட்டார்கள். அதேவேளை வடக்கு கிழக்கில் உள்ள சில தமிழ் விரோதிகளும் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிங்களப் பேரினவாதிகளை விமர்சிப்பதைவிடுத்து, விக்னேஸ்வரனை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். தமது தேர்தல் பிரசாரங்களில் விக்கியை பற்றியே பேசி தங்கள் பயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்கூட கூட்டமைப்பையும் அரச தரப்பையும் விமர்சிப்பதைவிட அதிகமாக விக்கி தரப்பை விமர்சித்து, விக்கியின் ஆதரவை தமது பக்கம் திருப்புகின்ற சதி வேலைகளைகூட செய்தார்கள் என்பது பலருக்கும் நன்றாக தெரிந்த விடயமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நீதியரசர் விக்னேஸ்வரன், காலப்போக்கில் வடக்கு மக்களால் அதிகம் விரும்பப்படுகின்ற அரசியல் தலைவர் ஆனார். வடக்கிலேயே வாழ்வதன் மூலமே ஈழத் தமிழ் மக்களின் மனங்களை நன்றாக உணரவும் அவர்களுக்கு உகந்த அரசியல் தலைவராக வாழவும் முடியும் என்பதை வெளிப்படுத்திய தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அவரது முதலமைச்சர் பதவியை ரணில் அரசுக்காக கவிழ்க்க சதி முயற்சியில் ஈடுபட்டது. எனினும் மக்கள் வீதிக்கு திரண்டு அளித்த ஆதரவினால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

நீதியரசர் விக்னேஸ்வரனின் தனித்த அரசியல் பயணம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துரோகச் செயல்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. தென்னிலங்கையில் ஈழத் தமிழ் மக்களின் இருப்புக்கு எதிரான நுட்பமாக முன்னெடுக்கப்படும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது ஆகும். அத்துடன் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானத்தை கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் மூலம், ஈழத் தமிழ் மக்களின் நீதியை அவாவும் முகமாகவும் குரலாகவும் விக்கி முதன்மை பெற்றார். இது அவருக்கு வடக்கில் மாத்திரமின்றி கிழக்கிலும் அபிமானத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விக்னேஸ்வரனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள் என்பது அவர் கொண்டிருக்கும் கொள்கைகளுக்காகவே. ஆளரசியலை விடுத்து கொள்கைக்கான அரசியலை முன்னெடுத்திருக்கும் திரு விக்னேஸ்வரனை ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர் கூறியது போல ஒரு தலாய்லாமாவாக கருத வேண்டும். இனப்படுகொலைக்கு நீதி காண வேண்டும், சர்வ தேச விசாரணையின் அடிப்படையில் அந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன் சர்வஜென வாக்கெடுப்பு வடக்கு கிழக்கில் நடத்த வேண்டும் என்பதையும் ஈழ மக்களின் அபிலாசையாக விக்கி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் மக்களுக்கு அளித்து பிற் காலத்தில் கைவிட்ட கொள்கைகளை விக்கி அவர்கள் மக்களுக்காக பொறுப்பேற்றதுடன் காலத்திற்கும் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்திற்கும் உகந்த வகையில் தன் வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் அமைத்து புதியதொரு மாற்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதனை மக்கள் வரவேற்றுள்ளனர். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருந்தா விட்டால் எதிர்காலத்தில் முழு ஆசனங்களும் விக்கி தரப்புக்கு கிடைக்கும்.

மிக அண்மையில் கட்சியை தொடங்கி, சில மாதங்களுக்கு முன்னர் கட்சி சின்னத்தை அறிவித்து, பெரும் பொருளாதார செலவுகள் இல்லாமல் மக்கள் மத்தியில் கொள்கையை எடுத்துரைத்து பெற்றிருக்கும் இந்த வெற்றி, ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலுக்கு புதிய வழியை திறந்திருக்கிறது. நீதிக்கும் உரிமைக்குமான நேர்மையான வெளிப்படையாக அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற ஈழத் தமிழ் மக்களின் நேரிய சிந்தனை வெளிப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் துரோகங்களும் ஏமாற்றுக்களும் ஒழிய, தமிழ் தேசியம் எழுச்சி பெற, விக்கினேஸ்வரன் புதிய பாதையை திறந்திருக்கிறார் என்பது திண்ணம்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்  

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)