இன அழிப்பின் உபாயமே காணாமல் போகச் செய்யப்படுதல்!

samakaalam 1 1
samakaalam 1 1

போர் முடிந்து விட்டது தானே, அத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது என்ற தொனியில் இலங்கை அரசும் அதற்குச் சார்பான சில நாடுகளும் பேசுகின்றன. போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குதலே பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கான மருந்து. உண்மையில் போருக்கு கொடூரமான நிறையப் பக்கங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் காணாமல் ஆக்கப்படுதல். நம் வாழ்வில் கைதவறி சில பொருட்களை தொலைத்து விட்டு வாழ்வு முழுதும் அதை பற்றி கவலை கொள்ளுவதுண்டு. மகத்தான மனித உயிர்களை தொலைத்துவிட்டு கவலைப்படுகின்ற வாழ்வு என்பது இன்னும் தொடருகிற போர்தான்.

ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம். உண்மையில் இதுபோன்ற ஒரு தினத்தை கொண்டாட இந்த உலகம் வெட்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மனித உரிமைக்கும் எதிரான அநீதிகளின் அதிகரிப்புதான் இந்த நாளை கொண்டாடுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இந்த நாளை கொண்டாடுகின்ற இனமான நாம் ஆகிவிட்டதை எண்ணி மிகவும் துயருர வேண்டி இருக்கின்றது. ஈழத் தெருக்கள் என்பது உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைகின்ற அன்னையர் நிலம்தான்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. காலத்துயரம் நிரம்பிய அக் கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை உலுப்புகின்ற செயல். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடாத்தியே வருகின்றனர். உலகிலேயே இவ் அவலம் அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.

உலக அளவில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பாக சர்வதேச புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இலங்கை அரசு நடாத்திய இன அழிப்பு போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே உலகில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு இலங்கை என்ற பெருமையும் உண்டு.

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு உபாயமாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலகில் ஜனநாயக ரீதியில் உரிமைகளை கோருகிறவர்களை காணாமல் ஆக்குவது என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற கருத்து உண்டு. உண்மையில் அதை கனகச்சிதாக இலங்கைக்குப் பொருந்துகின்றது. உரிமை கோரி போராடிய ஈழத் தமிழ் மக்களை காணாமல் ஆக்குவதை ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசாங்கம் காணாமல் போதலை ஒரு கருவியாக கையாள்கின்றது. குறிப்பாக இராணுவத்தின் வசம் போரில் வீழ்ந்த தமிழர் பகுதிகளில் காணாமல் ஆக்கப்படுதலின் வாயிலாக இளைஞர்கள், யுவதிகள் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்படும் அவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சில கொலைகள் அப்படி அம்பலமாகியுமுள்ளன.

சிங்கள இராணுவத்தின் வசமிருந்த யாழ்ப்பாணம் போன்ற அரச காட்டுப்பாட்டு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஏன் வீடுகளுக்குள் நுழைந்தும் இரண்டு மூன்று சகோதரர்களாக கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் சரணடைந்தவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களும்கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குப் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம், இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றது. அவர்கள் உயிருடன் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல வேண்டியது அவ் அரசின் வகை கூறலும் பொறுப்புமாகும். இதிலிருந்து ஒருபோதும் இலங்கை அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் உணர்வுபூர்வமான சிக்கலான விடயமாகும்.

காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் கொடூரமான இன ஒடுக்குமுறையை இனவழிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. அது மாத்திரமல்ல, இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை தனது சொந்தப் பிரஜைகளாக கருதவில்லை. இன்னொரு நாட்டின் அடிமைகளாக கருதியதினாலேயே இவ்வாறு காணாமல் ஆக்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தமது தாயகத்தை கோரினால் காணாமல் ஆக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான அச்சுறுத்தலையே இதன்மூலம் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கின்றது.

காணாமல் போனோருக்கு அரச அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதை தமிழ் மகக்ள ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் சர்வதேச தலையீடுதான் நீதியைப் பெற்றுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உண்மையில் இந்த விடயத்தை அரசியல் முதலீடாக கருதாமல் உணர்வுபூர்வமான விடயமாக கருதி, விளைவுகளை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தலைமைகள் ஈடுபட வேண்டும். இதனை ஆதாரபூர்வமான விடயங்களுடன் சர்வதேச ரீதியாக வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே நீதிக்கான வழிமுறையாகும்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகுந்த ஆளுமைகள். எமது இனத்தின் வளத்திற்கும் செழிப்புக்கும் அடிப்படையானவர்கள். அத்தகைய மனிதர்களை இழந்த இந்த மண் எத்துணை இழப்பை சந்தித்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்? ஈழப் போரில் இலங்கை அரசு இழைத்த அநீதிகளை உலுப்பும் ஒரு ஆயுதமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு பதில் அளித்தே ஆக வேண்டும். இலங்கை அரசு அளிக்கும் பதில் என்பது பல்வேறு உண்மைகளை அம்பலம் செய்வதுடன் இத்தீவின் அமைதிக்கான திறவுகோலாகவும் இருக்கும்.

தமிழ்க்குரலுக்காக தீபச்செல்வன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)