13 ஒழிக்கப்படுமா? வெறுமையாகுமா?

samakaalam
samakaalam

எதிர்பார்த்தபடி – சொல்லியபடி 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் திட்டம் நிறைவுக்கு வருகின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டியது மட்டுமே மீதமுள்ளது. 150 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கத்திற்கு இது ஒன்றும் கடினமான வேலையல்ல.

20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதே கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் திட்டம். இதற்கு அவர்கள் முன்வைக்கும் கோஷம் அது ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பதுதான். அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதாக – நன்மையானதாக – அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகத் தோன்றலாம். ஆனால் சிறுபான்மையினரை மேலும் அடக்கி ஒடுக்கும் – ஒற்றையாட்சிக்குள் பகிரப்பட்ட – 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உரிமைகளையும் தட்டிப் பறிப்பதாகவே இது அமையவுள்ளது.

19 ஐ ஒழிக்க அவசரம் ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற ராஜபக்ச தரப்பு ஆட்சியமைத்து முழுமையாக 4 வாரங்கள்கூட முடிவடையாத நிலையில் 19 ஐ ஒழிக்க தீவிரம் காட்டுவது ஏன் என்ற எழுவது இயல்பானதே.

பொதுவாக ராஜபக்சக்கள் அதிகார ஆசையுடையவர்களாகவும் – தமிழர்களுக்கு – தமிழ் பேசும் மக்களுக்கு விரோதமான போக்குக் கொண்டவர்களாகவே கடந்த காலங்களில் செயற்பட்டனர். பௌத்த – சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட இவர்கள் தமக்கான ஆதரவுத் தளத்தையும் அதன்மீதே அமைத்துள்ளனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கியதன் மூலம் தென்னிலங்கையில் அதீத செல்வாக்கைப் பெற்றவர்களுக்கு இப்போது வரை சிக்கலாக – ஆபத்தாக இருப்பது, தமிழரின் உரிமைப் போராட்ட அடக்குவதற்காக நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறல், போர் குற்றங்கள்தான். ஆட்சி – அதுவும் அதிகாரங்கள் நிறைந்த கேள்விக்கு உட்படுத்த முடியாத அதிகாரங்களுடன் தாம் இருந்தால் மட்டுமே தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து சர்வதேசத்திடம் இருந்து தப்ப முடியும் என்பதும் அவர்களின் எண்ணம்.

இதனால்தான் கேள்விக்கு உட்படுத்த முடியாத – தாம் நினைத்தபடி சிங்கள – பௌத்த நாட்டை உருவாக்க ராஜபக்சக்கள் முயல்கின்றனர். இதனாலேயே 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ஒழித்து மீண்டும் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை – அதுவும் சர்வாதிகாரத்துக்கு ஒப்பான அதிகாரங்களை 20 ஆவது திருதத்தின் மூலம் ஏற்படுத்த முயல்கின்றனர்.

என்னதான் பலமாக – மூன்றில் இரண்டு பலத்துடன் ராஜபக்ச அரசு இருப்பினும் புதிய அரசமைப்பை உடனடியாக வரைந்து விட முடியாது. குறைந்தது ஒரு வருடமேனும் தேவை. அதுவரை 19 ஆவது திருத்தத்தை மாற்றுவது அல்லது ரத்துச் செய்வது என்பது விரைவு மற்றும் இலகு வழியாகும். இதனாலேயே 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதில் ராஜபக்ச தரப்பு தீவிரம் காட்டி வருகின்றது.

13 ஒழிக்கப்படுமா?

13 ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது அதிகாரத்தில் இருக்கும் பேரினவாத சிந்தனையில் ஊறித் திளைத்திருக்கும் ராஜபக்ச தரப்பினரின் எண்ணம் மட்டுமல்ல அவர்களுக்கு ஒத்தூதி – ஒட்டி உறவாடும் இனவாதிகளான விமல் வீரவன்ஸ, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில போன்றவர்களின் கூச்சலுமாகும்.

13 ஒழிப்பு விடயம்பற்றி அவர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் – தமிழ் மக்களில் ஒரு சாராரும் ஒன்றை நம்புகின்றனர். 13 ஐ ஒழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது – இந்தியா பாதுகாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. காரணம் அது இந்தியாவால் உருவாக்கப்பட்டது என்பதே.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ச இந்தியாவின் அழைப்பை ஏற்று முதல் பயணமாக அந்நாட்டுக்கு சென்றார். அவரிடம், 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஆனால், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு கோத்தாபய அளித்த நேர்காணலில் 13 ஐ நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். இதனையே அவரது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச 13 ஐ நடைமுறைப்படுத்தும் கோரிக்கைக்கு செவிசாய்த்து இலங்கை வந்ததும் 13 ஐ ஒழிப்போம் என்றார்.

இப்போது, ராஜபக்சக்களின் அரசாங்கம் 13 ஐ ஒழிக்க – வறிதாக்கவே புதிய அரசமைப்பு உருவாக்க முயல்கிறது. இதன் மூலம் 13 ஐ மட்டும் வறிதாக்கி விடாமல் – வடக்கில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிங்கள, பௌத்தர்களின் குடியேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்கும் தேசவழமை சட்டத்தையும் ஒழிப்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது.

ஆனாலும், ராஜபக்சக்களின் திட்டத்தை இந்தியா அனுமதிக்காது – பொறுக்காது என்பது தமிழர்களின் நம்பிக்கை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் ஆதிக்கத்தை – செல்வாக்கை இலங்கையில் ஒழிப்பதே முதன்மையாக உள்ளது. இந்நிலையில் சீன ஆதரவுப் போக்குக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்கு தலையிடி கொடுக்கும் வேலையை – அவர்கள் விரும்பாததை வலிந்து திணித்து  அந்நியப்பட்டு போக இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் அண்மைக்கால செயற்பாடுகள் இதை அப்பட்டமாகவே வெளிப்படுத்தி நிற்கின்றன. அது மட்டுமின்றி இப்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் அரசின் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்வுத் திட்டத்தை விதந்து – கட்டாயப்படுத்த முனையாது. கொள்கை வகுப்பில் கட்சி பேதம் பார்க்கப்படுவதில்லை என்ற போதிலும் தாம் சார்ந்த கொள்கை வகுப்பை உருவாக்கவும் – தமது கொள்கைக்கு ஆபத்தான – இடராக இருக்கும் முன்னைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பை அகற்றுவதையும் ஆட்சியிலிருப்பவர்கள் தீர்மானிப்பது தவிர்க்க முடியாதது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத் தமிழர்களையும் – எதிர்க்கட்சியான காங்கிரஸையும் சமாளிக்க 13 ஒழிப்பு விடயத்தில் அல்லது அதனை வலுவிழக்கச் செய்யும் விடயத்தில் இந்திய அரசு தரப்பிலிருந்து வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியாகலாம். அது வெறும் கண்துடைப்பு அல்லது இந்தியர்களை சமாளிக்கும் – திருப்திப்படுத்தும் உத்தி. ஆக 13 ஒழிப்பு அல்லது அதிகாரம் ஏதுமற்ற வெற்று மாகாண சபை முறைமையே புதிய அரசமைப்பில் இருக்கும் என்பதே யதார்த்தம்.

கரிகால் வளவன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)