கட்சிக்கும் மக்களுக்கும் ஈயாத இலங்கையின் முன்னணிப் பணக்காரரின் கதை

samakaalam 1
samakaalam 1

கடந்த சில நாட்களாக கஜேந்திரகுமார் எம்.பி. புதிதாக அமைத்து வரும் வீட்டின் வரைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றது. இப் படத்தை பகிரும் சமூக வலைத்தளவாசிகள், “இது இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அல்ல, கஜேந்திரகுமார் எம்.பி. அமைக்கும் வீடு” என குறிப்பிடுகின்றனர். அதனைப் பற்றி பேசுவதும் விமர்சிப்பதும் இப் பத்தியின் நோக்கமல்ல. அப் படம் ஏன் வெளியில் வந்தது? குறித்த வீட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்ட சிங்கள தொழிலாளி ஒருவர் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்தார். கஜேந்திரகுமாரின் வீட்டை  நிர்மாணிக்க சிங்கள தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர் என்பதே எழுந்திருக்கும் விமர்சனம்.

கட்சிக்கும் மக்களுக்கும் ஈயாத இலங்கையின் முன்னணிப் பணக்காரரின் கதை

கட்சிக்கும் மக்களுக்கும் ஈயாத இலங்கையின் முன்னணிப் பணக்காரரின் கதை

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Montag, 7. September 2020

அது மிகவும் நியாயமான கேள்வி. வடக்கு, கிழக்கில் ஒரு தமிழ் கட்டட ஒப்பந்தகாரர்கூட கஜேந்திரகுமாருக்கு கிடைக்கவில்லையா? இன்றைக்கு எத்தனை முன்னாள் போராளிகள் கட்டடங்கள் அமைக்கும் நிறுவனங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குகூட இந்த வேலை வாய்ப்பை கொடுக்காமல் தென்னிலங்கை ஒப்பந்த நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது என்பது சொல்லும் செயலுக்கும் தொடர்பற்ற வேலைதான். இதையே வேறு தமிழ் கட்சிகள் செய்திருந்தால், கண்ணை மூடிக் கொண்டு அவர்களுக்கு துரோகிப் பட்டத்தை கொடுத்திருப்பார் கஜேந்திரகுமார்.

உண்மையில் இதனை ஒரு சாதாரண மனிதர் செய்திருந்தால், யாரும் அவர் மீது குறை சொல்லவும் கோபம் கொள்ளவும் வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் தமிழர் தேசம், வடக்கு, கிழக்கு என்று பேசிவிட்டு, “ஊருக்கு உபதேசம், உனக்கு இல்லையடி” என்பது போல் நடந்துள்ளார் கஜேந்திரகுமார். அது மாத்திரமின்றி, புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களை தமிழர் தேசத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார் இலங்கையின் முன்னணி பணக்காரராக இருந்து கொண்டு தான் வடக்கு, கிழக்கில் என்ன முதலீடு செய்திருக்கிறார்? தென்னிலங்கையின் பிரபலமான நிறுவனங்களிலும், குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்து, அதன் வாயிலாக வடக்கு, கிழக்கில் தற்கொலைகளை தூண்டுகிற முதலீட்டையே அவர் செய்துள்ளார். வடக்கு, கிழக்கில் 250பேருக்கும் அதிகமாக, நுண்கடன் நிதியால் தற்கொலை செய்த பிறகும் கஜேந்திரகுமார் இன்னமும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் பங்குதாரராக தன் முதலீட்டை தொடர்கிறார். புலம்பெயர் உறவுகளை விடவும் அதிக பணத்தை கொண்டிருக்கும் இவர் இதுவரை வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்த எந்த முதலீடும் செய்யவில்லையே? அப்படி செய்திருந்தால், அது முன்னுதாரணமான செயலாக இருக்கும். அதனைப் பலரும் பாராட்ட முன் வந்திருப்பார்கள்.

அது மாத்திரமல்ல, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என அழைக்கப்படும் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான கட்சி நிதியைக்கூட தன் சொந்த பணத்தில் இருந்து எடுக்காமல் புலம்பெயர் மக்களிடம் வாங்கியே கஜேந்திரகுமார் கட்சியை வளர்க்கிறார். தனது சொந்த நிதியில் பத்திரிகைகளில் எத்தனை விளம்பரங்களை செய்தார் என்று கூற முடியுமா? சொந்த நாட்டைப் பிரிந்து, குடும்பத்தை பிரிந்து, வீட்டுக்காகவும் நாட்டுக்காகவும் உழைக்கும் புலம்பெயர் உறவுகளின் குருதியை உறிஞ்சும் வேலையல்லவா இது?

முன்னணிக்கு ஆதரவளிக்கும் புலம்பெயர் உறவுகள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.  
இலங்கையின் முன்னணிப் பணக்காரனாக இருக்கும் நீங்கள் தமிழ் இனத்தின் மீட்சிக்காக ஓர் ஊடகத்தை நடத்தலாமே? உங்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் இல்லை என்று கூறுகின்ற நீங்கள் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான மகாராஜா ஊடக வலையமைப்பை விடவும் பெரிய ஊடகத்தை நடத்தலாமல்லவா? அதற்கு ஏன் முன்வரவில்லை. கட்சியின் பிரசாரப் பத்திரிகைக்குக்கூட புலம்பெயர் தேசத்தில் இருந்து மக்கள் ஒடிந்து ஒடிந்து உழைத்து அனுப்ப வேண்டுமா?

உங்கள் நிதியை தென்னிலங்கையில் முதலீடு செய்துவிட்டு புலம்பெயர் தேசங்களில் குளிரிலும் பனியிலும் மக்கள் உழைத்து அனுப்புவதைதான் உங்கள் பாட்டன் கட்சியை வளர்க்க பயன்படுத்த வேண்டுமா?
மக்கள் முன்னணியின் முன்னுதாரமாண இளைஞர்களான மணிவண்ணனும் பார்த்தீபனும் சபை உறுப்பினர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருக்கும் பட்சத்தில் தமக்கு வழங்கப்படும் சம்பளத்தை மக்களுக்கு வழங்குவதாக கூறினார்கள். பார்த்தீபன் இன்றும் அதை செய்து வருகிறார். இலங்கையின் பணக்கார பட்டியலில் முன்னணி வகிக்கும் உங்களால் ஒப்புக்குக்கூட உங்கள் சம்பளத்தையும் வரப் பிரசாதங்களையும் மக்களுக்கு வழங்குவேன் என்று சொல்ல முடியவில்லையே?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைவிட, ஏன் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரைக் காட்டிலும் பணக்காரப் பட்டியிலில் முன்னிலை வகிக்கும் உங்களால் உங்கள் பாராளுமன்ற சம்பளத்தையோ, அல்லது வரப் பிரசாதங்களையோ, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்கக் கொடுக்கலாமல்லவா?

இன்றுவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்ய முன்வரவில்லை. முதன் முதலில் தமிழ் தேசியக் கட்சி ஒன்றை பதிவு செய்யலாமல்லவா? அதனை எடுத்துரைத்தவர்களுக்கு துரோகிப் பட்டம் கட்டிவிட்டு, பாட்டன் கட்சியை காப்பாற்ற வேண்டும், அதன் தலைமைப் பதவியை உங்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய அரசியலையே பலியிட்டு வருகிறீர்களே?

கஜேந்திரகுமார் அவர்கள், தனது அத்தனை செயல்களினாலும், ஒன்றைத் தெளிவாக உணர்த்துகிறார். பணத்திற்காகவும் குடும்ப நலனிற்காகவும் தன் பாட்டன் கட்சி என்ற அடையாளத்திற்காகவும் தமிழ்த் தேசியத்தை பயன்படுத்துவார். தமிழ் தேசியத்தை பலியிடுவார் என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்கிறார். சிங்கள தேசத்தில் தன்னைப் பிரிக்க முடியாதபடி முதலீடு செய்துவிட்டு தமிழ் தேசம் – தமிழ்த் தேசியம் என்று பேசி மற்றவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி, ஏமாற்று அரசியலை செய்வேன் என்பதைதான் சொல்லாமல் சொல்கிறார். ஆக, சொத்தை காப்பாற்றுவதும், பாட்டன் கட்சியைக் காப்பாற்றுவதும்தான் கஜேந்திரகுமாரின் இலட்சியம்.

தமிழ் மக்கள் தம்மை ஏமாற்றியவர்களை தண்டிக்க ஒருபோதும் பின் நின்றதில்லை. கடந்த கால தேர்தலில் நல்ல சாட்டை அடி கொடுத்திருந்தனர். எதிர்காலத்திலும் அது தொடரும். தமிழ் தேசியத்தின் பெயரால் மக்களை முட்டாள் ஆகின்ற அரசியலானது சிங்கள இனவாத அரசியலை விஞ்சுகிறது.  பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக, இன அழிப்பு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது நீங்கள் செய்கின்ற பணக்கார அரசியல் சவாரிக்கு எமது மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள்.

தமிழ்க்குரலுக்காக சிரித்திரன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)