13அம்ச கோரிக்கைகள் : மீண்டும் ஒரு ஏமாற்று நாடகமா?

13amsa
13amsa

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து பிரதான தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தன. மக்கள் மத்தியிலும் இது ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஐந்து பிரதான கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கையில் உடன்பட்டிருந்தன. பிரதான சிங்கள வேட்பாளர்களை சந்தித்த பின்னர் இறுதி முடிவெடுப்பதாகவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவருமே மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருமித்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டனர். அதற்கும் மேலாக ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான நேரத்தைக் கூட அவர்கள் வழங்கவில்லை. சிங்கள வேட்பாளர்கள் இதனை நிராகரிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்தான். ஆனால் இவ்வாறானதொரு உடன்பாட்டிற்கு இணக்கம்தெரிவித்து, ஆவணத்தில் கையெழுத்திட்ட கட்சிகளில் எத்தனை கட்சிகள் இப்போதும் அந்த உடன்பாட்டிற்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதிலும் இப்போது சந்தேகங்கள் எழுகின்றன. இந்தச் சந்கேதத்தை உறுதி செய்யும் வகையில் ஜந்து கட்சிகளுக்கிடையில் பிறிதொரு சந்திப்பு இந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இதன் போது இலங்கை தமிழரசு கட்சி சஜித்பிரேமதாசவை ஆதரிப்பதற்கான உடன்பாட்டை ஏற்கனவே இரகசியமாக மேற்கொண்டுவிட்டது என்னும் உண்மை வெளியாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளான புளொட் மற்றும் டெலோவினதும் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது.


அவ்வாறாயின் 13அம்ச கோரிக்கையின் பெறுமதி என்ன? மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பெறுமதி என்ன? சம்பந்தனை பொறுத்தவரையில் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் இயலாவாளிகளாக கருதும் ஒருவர். இறுதி நேரத்தில் தான் ஒரு முடிவை அறிவித்தால் அதனை எதிர்த்து செயற்படும் நிலையில் எவருமே இல்லையென்பதையும் அவர் தெளிவாகவே புரிந்துவைத்திருக்கின்றார். 2010 ஜனாதிபதி தேர்தலின் போது சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவையும் பின்னர், 2015 தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவையும் சம்பந்தன் அவ்வாறுதான் எடுத்திருந்தார். சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை அறிவித்தபோது அவருக்கும் தங்களுக்குமிடையில் ஒரு உடன்பாடு இருப்பதாகவும் அதனை தனது வங்கி லாக்கரில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதனை இன்றுவரை எவருமே கண்டதில்லை எனெனில் அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. பின்னர் மைத்திரிபாலவை ஆதரிக்கும் போது ஒப்பந்தம் செய்தால் அது மகிந்தவிற்கு சாதகமாகிவிடும் என்று கூறி தனது முடிவை நியாயப்படுத்தினார். சம்பந்தன் இவ்வாறு ஒவ்வொரு முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்தபோது, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கோயில்மாடுகள் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தனர். இப்போதும் நிலைமைகளில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே தன்னைச் சுற்றி இடம்பெறும் விடயங்களை பொருட்படுத்தாமல் எப்போதும் தன்னிஸ்டப்படியே தீர்மானங்களை எடுத்துவருகின்றார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜந்து கட்சிகளின் இணக்கப்பாட்டை சம்பந்தன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே திட்டமிட்டவாறு சஜித்பிரேமதாசவை ஆதரித்து தனது அறிக்கையை வெளியிடுவார். அப்போது அனைவருமே அதற்கு தலையாட்டுவர். இதுதான் நடக்கப்போகின்றது.


உண்மையில், மக்களின் அரசியல் தலைமைகளோடு பேசுவதற்குக் கூட நேரம் ஒதுக்க விரும்பாத சிங்கள வோட்பாளர் ஒருவரை ஆதரிக்குமாறு கூட்டமைப்பு கூறுமானால், அதனையும்விட ஒரு அரசியல் வங்குரோத்துநிலை இருக்க முடியாது. 13அம்ச கோரிக்கைகள் காற்றில் பறக்கப்போவது உறுதியாகிவிட்ட ஒன்று. மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் போக்கென்பது தமிழ்த் தேசியவாத தேர்தல் அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. அது கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் செய்துவரும் ஒன்றுதான். ஆனால் இப்போது இந்த கூட்டமைப்பு பொறியில் விக்கினேஸ்வரனும் சிக்கிக்கொண்டார். ஆனாலும் அவர் இப்போதே நிலைமைகளின் சிக்கல்தன்மையை விளங்கிக்கொண்டதாகவே தெரிகிறது. அவர் விரைவில் இந்தப் பொறியிலிருந்து வெளியில் வருவார் என்றும் நம்பப்படுகின்றது.


உண்மையில் இங்கு பரிதாபத்துக்குரியவர்கள் எமது மக்கள் மட்டும்தான். கூச்சமின்றி ஏமாற்றும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளின் பின்னால் இழுபடுவதே அவர்களின் தலையெழுத்தாகிவிட்டது. 13அம்ச கோரிக்கைகளை மக்கள் கோரவில்லை. கட்சிகளே மக்களின் பேரால் அதனை முன்வைத்தன. இதற்கான தரகு வேலையையே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்தனர். ஆனால் இப்போது அதே கட்சிகளே அதனை தூக்கிவீசிவிட்டு தங்கள் வழியில் பணிக்கப்போகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இயங்குவதாக கூறிக்கொள்ளும் சிவில் சமூக அமைப்புக்கள், புத்தஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவருமே இயலாவாளிகள் என்பதுதான் இதிலிருந்து தெளிவாகும் உண்மை. இல்லாவிட்டால் இவ்வாறு பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆவணத்தை இவ்வளவு சாதாரணமாக ஒதுக்கித்தள்ள முடியாது. இந்த அரசியல் ஏமாற்று நாடகத்தில் இப்போது அனைவருமே நடிகர்கள்தான். ஒரு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக ஒரு சுயாதீனக் குழுவை நியமித்த தமிழ் மக்கள் பேரவை வாய்திறக்காமல் இருக்கின்றது. பேரவைக்காக இயங்கிய சுயாதீனக் குழு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் இதுவரை வாய்திறக்கவில்லை. இந்தக் குழுவில் அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம் போன்றவர்களும் இடம்பெற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஐந்து கட்சிகள் கையெழுத்திட்ட 13அம்ச கோரிக்கைகள் வெளியாகின. ஒரு விடயத்தை சாதிக்க முடியாது. அதற்கான வல்லமை கட்சிகளிடம் இல்லை என்றால் எதற்காக இவ்வாறானதொரு விடயத்தை முன்னெடுக்க வேண்டும்? கட்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களுக்கில்லை என்றால் எதற்காக இவ்வாறான முயற்சியில் இறங்க வேண்டும்? மதத்தலைவர்கள் கூறுவதை தமிழ் கட்சிகள் எப்போது ஏற்றுக்கொண்டிருக்கின்றன? மதத்தலைவர்களுக்கு தங்களின் இடம் என்னவென்றுகூட விளங்கவில்லை. சிங்களச் சூழலில் இருப்பது போன்று அல்லது முஸ்லிம் சமூகத்தில் இருப்பது போன்று கட்சிகளை கட்டுப்படுத்தும் வல்லமைகொண்ட மதத்தலைமைகள் தமிழ் சமூகத்தில் இல்லை.


இன்று இறுதியில் என்ன நடத்திருக்கிறது. அளவுக்கதிகமான சமையல்காரர்கள் சேர்ந்து சாப்பாட்டை பழுதாக்கிய கதையில் முடிந்திருக்கிறது. இறுதியில் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். 13அம்ச கோரிக்கைகள் என்னும் பெயரில் தமிழ் கட்சிகள் ஒளித்துப்பிடித்து விளையாடியிருக்கின்றன. சிங்கள தலைமைகள் மத்தியில் தமிழர்களின் பலவீனம் மீண்டுமொருமுறை அமம்பலமாகியிருக்கின்றது. எந்த சிங்களத் தலைமை இனி தமிழ் தலைமைகளை மதிக்கும்? தாங்கள் கூடி எடுத்துக்கொண்ட ஒரு உடன்பாட்டில் கூட உறுதியாக நிற்கும் திராணியற்ற தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவையா? உண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அமைப்பு உருவாக வேண்டும். அதன் ஒரே இலக்கு எமது மக்கள் மத்தியில் விடுதலை, தேசியம், தேசம், சர்வதேச சமூகம், ராஜதந்திரம் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதும், அவ்வாறானவர்களை மக்கள் மத்தியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றுவதுமே அந்த அமைப்பின் பணியாக இருக்க வேண்டும். சிங்கள தலைமைகளை எதிர்கொள்வதற்கு முன்னர் முதலில் ஒரு தமிழ் அரசியல் துப்பரவு வேலை அவசியப்படுகின்றது. அக்கறையுள்ள அனைவரும் முதலில் அவ்வாறானதொரு அமைப்பாக திரள்வோம்.

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்