மட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை : ஆளுநர் X அரசாங்க அதிபர் = அரசியல் இலாபம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ஆதரவாளரும் இம்முறை தேர்தலில் பிள்ளையானை ஆதரித்து செயற்பட்டவருமான நண்பர் ஒருவருடன் உரையாட நேர்ந்தது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத் தனத்தினால்த்தான் பிள்ளையானை ஆதரித்துச் செயற்பட்டேன் இன்று அவருடைய செல்வாக்கினால் மட்டக்களப்புக்கு நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளரின் உடனடி இடமாற்றத்தைக் கூட தடுத்து நிறுத்தமுடியாத நிலையில் உள்ளார். எல்லோரும் ஒன்றுதான் பேசாமல் தமிழ் கூட்டமைப்புக்கே வாக்களித்திருக்கலாம் போல” என்று சலித்துக் கொண்டார்.

இந்தச் சலிப்பு தனிமனிதன் ஒருவருடைய சலிப்பாகத் தெரியவில்லை அது பிள்ளையானுக்கு, கருணாவுக்கு, வியாழேந்திரனுக்கு வாக்களித்த மக்களுடைய சலிப்பாகவும் எனக்குத் தெரிகிறது. அது தொடர்பாக ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

பிள்ளையானின் பணி

முதலில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது மேச்சல் தரை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான விளக்கம் அவசியமாகும்.

பிள்ளையான் முதலமைச்சராகி 8 மாதங்களின் பின் மட்டக்களப்பு மாவட்ட மேச்சல்த் தரைக்குத் தேவையான நிலத்தினை அடையாளம் கண்டு அறிக்கையிடுவதற்கான ஒரு குழுவை அமைத்திருக்கின்றார். அக்குழுவினர் கோறளைப் பற்று தெற்குப் பிரதேச செயலகம், மண்முனை மேற்கு பிரதேச செயலகம், கோறளைப் பற்று வடக்குப் பிரதேச செயலகம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று பிரதேச செயலகம், போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் இருக்கும் மேச்சல் தரைக்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். அக்குழுவினால் அடையாம் காணப்பட்ட இடங்களை நில அளவை செய்து வழங்கும் பொறுப்பை நிலஅளவைத் திணைக்களத்திடம் வழங்கியுள்ளார். அவர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாகப் பணியாற்றி மிகப் பெரும் அளவான நிலப்பரப்பினை அளவீடு செய்து வரைந்தளித்திருக்கின்றனர்.

( படம் 1, 2 அவ்வாறு அளவீடு செய்யப்பட்ட வரைபடங்களாகும்.) இதன்படி மேச்சல் தரைக்கான நில ஒதுக்கீடு 28,034.34 ஹெக்டயர் ஆகும். ஆயினும் காணி அதிகாரமற்ற மாகாணசபையினால் இந்த நிலத்தினை சட்டரீதியாக ஒதுக்குவதற்று முடியாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் தனக்கு மகிந்த தரப்புடன் இருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி அந்நிலங்களை சட்டரீதியாக ஒதுக்குவதற்கான நகர்வினை மேற்கொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.

மாகாணசபை ஆட்சி கைமாறியதன் காரணத்தினாலும் பிள்ளையான் சிறையிலடைக்கப்பட்டதன் காரணத்தினாலும் மேற்படி விடயத்தினை பிள்ளையானால் தொடரமுடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணி

பிள்ளையானுக்குப் பின்பு கிழக்கு மாகாண சபையில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கற்பனாவாத வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவர் வந்தால் தங்களது தமிழ்த் தேசியக் கனவு கலைந்து விடும் என்பதற்காகவும் கிழக்குத் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கி அதிலே அமைச்சுப் பதவியினையும் பெற்றெடுத்தனர். அந்த அமைச்சுப் பதவிகூட விவசாய அமைச்சாகும். அவ் அமைச்சைப் பொறுப்பெடுத்து நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பற்றுடையவராக இருந்திருப்பின் பிள்ளையான் அவர்கள் தொடங்கிவிட்ட இடத்திலிருந்து தனது பணியினை ஆற்றியிருக்க முடியும்.

அதற்கேற்றால் போல்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுடன் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. ஒவ்வோர் முறையும் ரணில் அரசு கவிழும் நிலைக்கு சென்றபோதெல்லாம் ஓடோடிச் சென்று அவருக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி முட்டுக் கொடுத்துக் காப்பாற்றினார்கள். மறந்தும் கூட இந்தப் பிரச்சினைகளைப் பற்றி இவர்கள் பேசியது கிடையாது.

தமிழ்த் தேசியம்,வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம் என எப்போதும் மேடைப்பேச்சிலும் ஊடகங்களிலும் உரத்துக் கூறுபவர்களுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுக்குக் கிடைத்த அரசியல் வாய்ப்பினைப் பயன்படுத்தி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயத்தையோ அல்லது இன்று மேலெழுந்துள்ள மேச்சல் தரைப் பிரச்சினையையோ கண்டுகொள்ளாமல் இருந்ததன் அரசியல் என்ன எனும் கேள்வி எழுகிறது.

கிழக்கு தமிழ்த் தேசியத்திலிருந்து விலகிச் செல்கின்றது எனப் புலம்பும் அரசியல் பத்தி எழுத்தாளர்களும் இவ்விடயங்கள் தொடர்பாக எழுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதைத் தவிர்த்தே வந்துள்ளனர்.

கிழக்குத் தமிழ் மக்களின் நிலைப்பாடு

இவ்வாறான சூழ்நிலையில்தான் கிழக்கு மக்கள் இம்முறை தேர்தலில்; அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள். அதாவது கிழக்கு மக்கள் ஆளுந்தரப்புடனும் சிங்கள மக்களுடனும் இனவாத அரசியல் நடத்த விரும்பவில்லை. அந்த இனவாத அரசியலை பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் ஆயுதப் போராட்ட அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தியே எம்மையும் இந்த நாட்டையும் இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

இது கிழக்கு மக்கள் சார்ந்த விடயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த எமது நாட்டுக்குமுரிய விடயமாகும். இனி நாம் இனவாத அரசியலைக் கைவிட்டு இன ஐக்கிய அரசியலை நடத்த விரும்புகின்றோம். அதனை இத் தேர்தல் மூலம் வெளிப்புடுத்துகின்றோம். என்பதே அதுவாகும். கிழக்கு மக்களுடைய இந்த இன ஐக்கிய அரசியல் விருப்பத்தைப் புரிந்து கொள்ளாத அரசின் நடவடிக்கையே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமாகும்.

அரசாங்க அதிபரின் பணி

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் மேச்சல் தரையாக இருந்த இடங்களை அம்பாரை, பொலநறுவை மாவட்ட மக்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியுடன் தங்கள் சேனைப் பயிர்ச் செய்கைக்கான இடங்களாகக் கொள்வதோடு; கால்நடைகளின் மேச்சலினையும் தடைசெய்கின்றனர். இதனால் கால்நடைகளுக்கான தீவனமின்றி கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய தொழிலை இழக்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் கவனத்துக்கு கால்நடை வளர்ப்பாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். மாவட்ட அதிபர் குறித்த இடங்களை நேரில் சென்று அவதானித்ததோடு குறிப்பிட்ட மக்களின் மேற்படி செயற்பாடானது சட்டத்துக்கு முரணானது என்பதையும் இவ்வாறான சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.

ஆளுநரின் அதிகாரம்

அரசாங்க அதிபரின் நடவடிக்கையினால் சீற்றமுற்ற கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக அரச உயர் மட்டங்களுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு அரசாங்க அதிபரை உடனடியாக இடம் மாற்றியுள்ளார். இவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக அரசுடன் சேர்ந்தியங்கும் இந்த மாவட்டத்தில் புதிய அரசியல் போக்கை ஏற்படுத்தியிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இது தொடர்பாக உரையாடியிருக்க வேண்டும். அவ்வாறு எந்தவிதமான உரையாடலையும் செய்யாது எடுத்த எடுப்பில் இடமாற்றம் வழங்கப்பட்டமை அப்பட்டமான இனவாத அதிகாரத்துவ நடவடிக்கையேயாகும்.

ஏனெனில் பிள்ளையான் மகிந்தவுக்கு எவ்வளவுதான் விசுவாசகமாக இருந்தாலும் சிங்கள மக்களின் நலன் என்று வருகின்றபோது பிள்ளையான் ஒரு பொருட்டல்ல என்பதை இது காட்டுவதாக தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.

13வது மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி அதிகாரம் மாகாண சபைக்குரியதல்ல அது மத்திய அரசுக்குரிய அதிகாரமாகும். மாவட்ட அரசாங்க அதிபர் மத்திய அரசின் பிரதிநிதியாவார். எனவே காணி விடயங்களை கையாளுகின்ற அதிகாரம் பிரதேச செயலாளருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமுரியதாகும். இந்த நிலையில் தனது அதிகாரத்துக்கு உட்படாத விடயத்தில் ஆளுநர் அதிகாரம் செலுத்தியதுடன் சரியாக அதிகாரம் செலுத்திய மாவட்ட அரசாங்க அதிபரைத் தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார்.

எனவே இங்கு அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதோடு சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் புறம்பான வகையில் அரசாங்க அதிபர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் நியாயப்படுத்தக்கூடிய நடவடிக்கையல்ல. இங்கு சட்டம் புறமொதுக்கப்பட்டு குறிப்பிட்ட இனத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் இலாப வேட்டை

அரசாங்கத்தைப் பொறுத்தவரை குறித்த சேனைப் பயிர் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை அவ்விடங்களில் இருந்து அகற்றுவது அரசியல் ரீதியாக தன்னைப் பாதிக்கும் சிங்கள மக்களின் அரசு என்கின்ற தனது முத்திரை கிழிக்கப்படுமானால் எதிர்காலத்தில் சிங்கள மக்களை வைத்து அரசியல் நடத்தும் தேர்தல் மைய அரசியல் இல்லாமல் போய் எதிர்க்கட்சி அவ்விடத்தை எடுத்துக்கொள்ளும் அதனால் தனது இலாபத்துக்காக மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு என்ன நடந்தாலும் சரி சட்டம் என்ன சொன்னாலும் சரி அவற்றைக் கண்டு கொள்ளப்போவதில்லை. இதனையே முக்கிய அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தளவில் கிழக்கில் சரிந்துபோயுள்ள தமது செல்வாக்கினை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கான அரசியல் சூழல் தற்போது அவர்களுக்கு இல்லை. ஏற்கனவே கிடைத்த சாதகமான அரசியல் சூழலைக்கூட சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் முற்றிலும் எதிர்மாறான அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்வினை நோக்கி நகர்த்துவார்கள் என எதிர்பார்பது பகல் கனவாகும்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கை எல்லாம் மட்டக்களப்பு மக்களின் வாக்குகளை அடுத்த தேர்தலில் எவ்வாறு அறுவடைசெய்யலாம் என்பதாகத்தான் இருக்கின்றதே தவிர பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக இல்லை. தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தால் இவ்விடயங்கள் இடம்பெற்றிருக்க மாட்டாது என்றோ அல்லது அவர்கள் இவ்விடயத்தை சும்மா விட்டிருக்கமாட்டார்கள் என்றோ பேசுவதும் எண்ணுவதும் அரசியல் போக்குத் தெரியா முட்டாளத்தனமாகும்.

வியாழேந்திரன், பிள்ளையான், கருணா ஆகியோரின் பணி

வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றோரை மட்டக்களப்பு, அம்பாரை தமிழ் மக்கள் விரும்பியதற்குக் காரணம் தங்களுடைய அபிவிருத்திக்காகவும் கிழக்கில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பதற்குமாகும். ஆனால் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் இடமாற்றம் தொடர்பாக இவர்களால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையிலே இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம் என்று கூறக்கூட முடியாதவர்களாக இருப்பது கிழக்கு மக்களின் துரதிஸ்டமாகும். உண்மையில் அவ்வாறு கூறுவது தாங்கள் எடுக்கும் நடவடிக்கையினைப் பாதிக்கும் என்பதினால்தான் அதனை அடக்கி வாசிக்கின்றோம் எனக் கூறுவார்களேயானால் அதில் ஒரு உண்மைத் தன்மையுண்டு. ஆனால் இவ்வாறு கூறி அதன் எவ்வித பயனையும் தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லையானால் அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போவதுடன் இவர்கள் பதவி ஆசைகளுக்காக அரசுக்கு சோரம் போகின்றவர்கள்தான் என்ற எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிடும்.

எனவே அரசாங்கம், இதுவரை காலமும் காலங்காலமாக அரசுகள் கடைப்பிடித்த இனவாத அரசியலைக் கைவிட்டு இனம், மதம், மொழி, என்கின்ற வேறுபாடுகளுக்கப்பால் சென்று சட்டத்தின் ஆட்சியினைக் கொண்டுவருதல் வேண்டும். அதுவே கிழக்குத் தமிழ் மக்களின் இன ஐக்கிய அரசியல் விருப்பத்தினை வளர்த்தெடுத்து முன்கொண்டு சென்று நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவதற்கான வழிமுறையாகும். அதைவிடுத்து இனவாத அரசியலை முன்னெடுக்க விரும்புமானால் இன்று இன ஐக்கிய அரசியலை விரும்பும் மக்கள் கூட இனவாத அரசியலுக்குள் தவிர்க்க முடியாதவகையில் உள்ளீர்க்கப்படுவார்கள் என்பதையே எனது நண்பருடனான உரையாடல் எடுத்துக்காட்டுகின்றது. இதனை வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் விளங்கிக் கொள்வதுடன் அரசுக்கும் இச் செய்தியினைத் தெரிவிப்பதும் அவர்களின் கடமையாகும்.

-எழுவான் வேலன்-