சாபக்கேடாக மாறியுள்ள தமிழ்த் தலைமைகள்

dfffffff
dfffffff

ஐந்து கட்சிகளின் இணக்கப்பாடு, 13 அம்ச கோரிக்கைகள், பிரதான வேட்பாளர்களோடு பேச்சுவார்த்தை, எழுத்து மூல உடன்பாடு – இப்படியெல்லாம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் கோலகாலமாக இருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாதித்துவிட்டனர் என்றும் சிலர் பேசிக்கொண்டனர்.

இதில் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அனைத்துமே கண்துடைப்பாகவும் ஏமாற்று நாடகமாகவும் முடிவுற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் அனைவரது முகத்திலும் இலங்கை தமிரசு கட்சி காறி உமிழ்ந்திருக்கிறது. 2009இற்கு பின்னரான மிதவாத அரசியலில் இது முன்னர் எப்போதுமில்லாதவாறு ஒரு சிறந்த ஏமாற்று நாடகத்தை தமிழரசு கட்சியும் அதன் கூட்டாளிகளும் அரங்கேற்றிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் மாங்காய் மடையர்கள் என்று சொல்வார்களே அப்படியொரு மடையர்களாக்கப்பட்டிருக்கின்றனர். இத்தனை நடந்த பின்னரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் கம்பீரமாக அறிக்கைகளைவிட்டுக் கொண்டிருக்கின்றார். மாவை சேனாதி வழமைபோல் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்.

2009இற்கு பின்னர் தங்களை தமிழ் தலைமைகளாக இனம்காட்டிக் கொண்டவர்கள் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கின்றனர், எந்தளவிற்கு கையறுநிலையில் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். ஜனாதிபதி தேர்தலின் போது தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டலைக் கூட இவர்களால் வழங்க முடியாமல் இருக்கின்றது. தபால் மூல வாக்கெடுப்பிற்கு முதல்நாள்தான் அடுத்த நாள் வாக்களிக்கப்போகும் மக்களுக்கு என்ன கூறுவதென்று ஆராய்கின்றனர். இது எந்தளவிற்கு பரிகசிப்புக்குரிய ஒன்று. அவ்வாறு கூடிய கட்சிகள் எதனைக் கூறின? மக்களை முடிவெடுக்குமாறு கூறின.

அவ்வாறு கூறிய கூட்டமைப்பே தபால் மூல வாக்கெடுப்பிற்கு பின்னர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக கூறுகின்றது. தபால் மூல வாக்கெடுப்பிற்கு முன்னர் ஒரு முடிவு, தபால் மூல வாக்கெடுப்பிற்கு பின்னர் ஒரு முடிவு. இவர்கள்தான் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர் தாயகத்தில் சமஸ்டி ஆட்சியை நிறுவப்போகின்றனர். இது எந்தளவுக்கு வேடிக்கையான ஒன்று.

ஐந்து கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதில் தெளிவு இருந்திருக்கவில்லை. யாரோ கூறிய விடயங்களை உள்வாங்கிக்கொண்டு, அவர்கள் இழுத் இழுப்பிற்கு பின்னால் திரிந்தனர். கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சி காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அவர்கள் வெறும் சிறுவர்களாகவே இருந்தனர்.

இன்று, எந்த விடயத்திற்காக தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டதாக கூறப்பட்டதோ இன்று அந்த விடயத்தை அடிப்படையாக் கொண்டே அந்தக் கட்சிகள் முரண்பட்டு, மோதிக் கொண்டிருக்கின்றன. அனைவருமே ஜனாதிபதி தேர்தலில் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையையே ஏற்படுத்தியிருக்கின்றனர். இதனை தடுப்பதற்கோ அல்லது தங்களின் காத்திரமான எதிர்வினையைக் மாணவர் ஒன்றியத்தினால் பதிவுசெய்ய முடியவில்லை.

உண்மையில் இலங்கை தமிரசு கட்சி முக்கியமாக சுமந்திரன் ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டே, இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டே சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். உண்மையில் எந்தவொரு நிலைப்பாடும் இல்லாமல் இதில் பங்குகொண்டிருந்தவர்கள் விக்கினேஸ்வரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும்தான்.

விக்கினேஸ்வரன் உண்மையாகவே இந்த முயற்சியை நம்பியிருந்தார். பிரதான வேட்பாளர்களோடு பேசலாம் அதன் போது தமிழர் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கலாம் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில்தான் விக்கினேஸ்வரனுக்கு விளங்கியது எதுவுமே நடக்கப்போவதில்லை. சம்பந்தன் – சுமந்திரனின் சஜித்தை ஆதரிக்கும் நிகழ்நிரநிரலை நோக்கியே விடயங்கள் நகர்கின்றன. எனவே முதலில் அதிலிருந்து தான் வெளியேற வேண்டுமென்று அவர் முடிவெடுத்தார்.

அதனடிப்படையில் எந்தவொரு சிங்கள வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க முடியாது என்றவாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் விக்கினேஸ்வரனை அவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அவர் அவசரப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றனர். விக்கினேஸ்வரன் அவசரப்படாமல் பொறுமையாக இருந்திருந்தால் மாணவர்களால் தமிழரசு கட்சியின் முடிவை தடுத்துநிறுத்திருக்க முடியுமா? அந்த ஆற்றல் மாணவர்களிடம் இருந்ததா? உண்மையில் கட்சிகளை கட்டுப்படுத்தும் எந்தவொரு கடிவாளமும் எவரிடமும் இருந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வழியில் சென்றன.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவை ஆதிரிப்பது என்பதில் அவர்கள் ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்திருந்தனர். ஆனால் அதனை ஒரு சரியான தருணம் பார்த்து வெளியிடும் ஆலோசனையில் இருந்த போதுதான் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறானதொரு அழைப்பை விடுத்தனர். நாங்கள் தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகள் எதற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதை காண்பிக்கும் நோக்கில்தான் தமிழரசு கட்சி இதில் பங்குகொண்டிருந்தது.

இதன் காரணமாகவே கஜேந்திரகுமார் தேசம், இறைமை, இனப்படுகொலை தொடர்பில் கூறியபோது சுமந்திரன் அவை எவற்றுடனும் முரண்படவில்லை. எல்லாவற்றையுமே ஏற்றுக்கொண்டார். ஆனால் தானும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கூறியபோதுதான் சுமந்திரன் முரண்பட்டார். சுமந்திரன் வெளியேற முற்பட்டார்.

இடைக்கால அறிக்கையை நிராகாக்காவிட்டால் நான் வெளியேறுவேன் என்று கஜனும், அதனை நிராகரிக்கும் கோரிக்கையை உள்வாங்கினால் நாங்கள் வெளியேற நேரிடும் என்று சுமந்திரனும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த போது, கஜனது வெளியேற்றத்தையே மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். கஜனை வெளியேற்றி சுமந்திரனை பாதுகாத்தனர். உண்மையில் கஜன் வெளியேறிய போதே இந்த முயற்சியை மாணவர்கள் கைவிட்டிருக்க வேண்டும். ஆறுகட்சிகளையும் ஓரணியில் கொண்டுவர முடியாத போதே இந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது.

இடைக்கால அறிக்கையை கைவிடுவதில் முரண்பாடு கொண்டிருப்பவர்கள் அதற்கு முற்றிலும் எதிரான கருத்துக்களான தேசம், இறைமை, இனப்படுகொலை போன்ற விடயங்களில் எப்படி உறுதியாக இருப்பார்கள் என்பது தொடர்பில் மாணவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிந்திக்கவில்லை. இறுதியில் அனைத்து முயற்சிகளும் அதன் விளைவாக வெளிவந்த 13 அம்ச கோரிக்கைகளும் பரிகசிப்புக்குரியவையாகியிருக்கின்றன.

இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகியிருக்கின்றது. இன்று தமிழ் தலைமைகள் என்று கூறிக்கொண்டிருக்கும் எவருமே தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடியவர்கள் அல்ல. அதே போன்று அந்தக் கடசிகள் மீது அழுத்தங்களை பிரயோகிகக் கூடியவர்கள் என்று தங்களுக்கு தாங்களே ஒளிவட்டங்களை கீறிக்கொண்டிருக்கும் சிவில் சமூகம், புத்திஜீவிகள் சமூகம் எவையுமே கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் திறனோடு இல்லை.

அனைவருமே கையறுநிலையில்தான் இருக்கின்றனர். சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பவர்களிடம் அதற்கான தெளிவான பதிலில்லை. மக்களை முடிவெடுக்குமாறு கூறியிருப்பவர்களிடம் மக்களுக்கு கூறுவதற்கு தெளிவாக நிலைப்பாடில்லை. மொத்தத்தில் இப்போது மக்களை எவரும் வழிநடத்தவில்லை மாறாக மக்களுக்கு பின்னால் இழுபடுவதையே செய்கின்றனர். மக்களை வழிநடத்துபவர்கள் தலைவர்களா அல்லது மக்களுக்கு பின்னால் இழுபட்டுச் செல்பவர்கள் தலைவர்களா?

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்