பேரினவாதிகளின் பிரித்தாளும் வாக்கு வேட்டைக்கு பலியாகுமா தமிழினம்?

ddddddddddddddddd 4
ddddddddddddddddd 4


தமிழர்கள் மீது சிங்கள – பௌத்த பேரினவாதம்தான் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் கட்டவிழ்த்து விட்டது. இப்போது கிழக்கில், பெரும்பான்மையினராக மாறிவிட்ட முஸ்லிம்களும் தமிழர்கள் மீது அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் கட்டவிழ்த்து வருகின்றனர். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு முறை சிங்கள பேரினவாதத்தையும் விட தமிழர்களுக்கு ஆபத்தானதாக மாறி வருவதை யாரும் மறுக்க முடியாது.

இதனால்தான் தமிழர்களின் வெறுப்புப் பட்டியலில் இடம்பெற்ற டக்ளஸூம் கருணாவும் பிள்ளையானும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்வைத்து பிழைக்க முற்படுகின்றனர். அவர்களின் இந்தப் பிழைப்பு வாதம் கிழக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர் என்று கணிக்கப்படும் கோட்டாபய ராஜபக்ச பக்கம் நின்று அவரைப் பலப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் முஸ்லிம் எதிர்ப்பு.

ஆனால்….!
சிங்கள – பௌத்த பேரினவாதம் தனக்கு அச்சுறுத்தல் என்று கருதிய தமிழினத்தை  அழித்து – பலத்தை ஒடுக்கி – ஆக்கிரமிப்புக்களைக் கட்டவிழ்த்து – வெற்றி கொண்டுவிட்டது. இதற்கு முக்கிய சூத்திரதாரிகளாக அமைந்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சத்தில் எந்த ஜனாதிபதியும் எதிர்கொள்ள தயங்கிய அழிப்பை ராஜபக்ச சகோதரர்கள் தயங்காது செய்தார்கள். அதன் விளைவுகள் நமக்குத் தெரியாததல்ல. தமிழர்களை அழித்து – ஒடுக்கி – நிலங்களை கைப்பற்றிய பின்னர், சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் பார்வை முஸ்லிம்களின் மீது பதிந்தது. இதற்கு வாய்ப்பாக ஏப்ரல் 21 தாக்குதலும் அமைந்து விட்டது. இவ்வாறான நிலையில்தான் நாடு ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றது.

இந்தத் தேர்தலில் சிங்கள – பௌத்த இனவாதத்தின் அடையாளமாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவை எப்படியாவது வெற்றியடைய வைத்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் பேரினவாதிகள் செயற்படுகின்றனர். தனித்து சிங்கள – பௌத்தர்களின் வாக்குகள் மட்டுமே போதும் கோட்டாவின் வெற்றியைத் தீர்மானிக்க என்ற மனப்பால் குடித்தவர்களுக்கு எதிரணி வேட்பாளராகக் சஜித் பிரேமதாஸ குதித்தது பெரும் போட்டியைக் கொடுத்தது. எங்கே கடந்த தேர்தல் போன்று இம்முறையும் சிறுபான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையப் போகிறது என்ற எண்ணமே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஆனால், சிறுபான்மை இனங்களான தமிழர்களின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்களின் செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் சஜித் பக்கம் நிற்கின்றன. எனவே சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தனக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என்பதற்காக தமிழர் தரப்புக்களுடன் அவர் நட்பை ஏற்படுத்த முனைந்தார். அது பலனளிக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ்நிலை அரசியல்வாதிகளை பிரித்துத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார். அத்துடன் முன்னாள் போராளிகளையும் தம் வலையில் வைத்துக் கொண்டு தமிழர்களைக் குறிவைத்து சமூகவலைத்தளங்களிலும்கூட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இவரின் பிரசாரங்கள் தமிழர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. இதனால் வடக்கு, கிழக்கு தமிழர்களை பிரித்தாளும் விதமாக வடக்கின் முக்கிய பிரச்சினைகளையும் – கிழக்கின் முக்கிய பிரச்சினைகளையும் கையில் எடுத்து இரு மாகாணங்களையும் தனித்தனி பிரச்சினைகள் கொண்டதாகவும் காட்ட முயற்சிக்கிறார். தமிழர்களின் உரிமைப் போரில் இராணுவத்தால் சகல தமிழ் மக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டார்கள். ஆனால், இறுதிப் போரில் கிழக்கை விட அதிகம் பாதிக்கப்பட்டது வடக்குத்தான்.

இதனால், வடக்குத் தமிழர்கள் கோட்டாபய ராஜபக்ச மீதான வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இதனால், அவருக்கு எதிரான மனநிலை அதிகமாகவே உள்ளது. கிழக்கு தமிழர்கள் மத்தியிலும் அவருக்கு எதிரான மனநிலையே மேலோங்கி இருந்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளை தினமும் எதிர்கொண்டு வரும் அவர்கள், இந்தக் கொடுமைகளும் – ஆக்கிரமிப்புகளும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தமிழர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் வெறுப்புணர்ச்சியைப் போக்க கிழக்குத் தமிழர்கள் எதிர்கொள்ளும் முஸ்லிம்களின் தொல்லைகளை – ஆக்கிரமிப்புக்களை தனது பிரதான பேசுபொருளாக கிழக்கில் முன்னெடுத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. புதிய ஜனநாயக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகளும் பங்காளிகளாக உள்ளதால், அவர்களால் இந்தப் பிரச்சினையில் நேரடியாக எந்த வாக்குறுதியையும் அளிக்க முடியாது என்பதை தமக்கு சாதகமாகக் கொண்டு தமிழ் முதலமைச்சர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்வு என்ற வாக்குறுதிகளை கோட்டாபய ராஜபக்ச அள்ளிவீசி வருகிறார்.

தமிழர்களின் பழைய காயங்கள் ஆறாது வருத்தும் நிலையில் ஏற்பட்ட புதிய காயங்களுக்கு மருந்தாக கிழக்குத் தமிழர்கள் இதனைப் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர். இது சாத்தியமானதா என்பதை உறுதியாகக் கூறமுடியாத போதும், சஜித் தரப்பு அல்லது அவர்கள் சார்பில் வாக்குக் கேட்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான உறுதிப்பாட்டை வழங்க முடியாது – முடியவில்லை என்பது கோட்டா தரப்புக்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

இது இப்போதல்ல, முன்னரும் ஏற்பட்ட சிக்கல்தான். கிழக்கு மாகாண சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஐக்கிய தேசியக் கட்சிகள்  கூட்டாக ஆட்சி அமைக்க முற்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவிகளைக் குறிவைத்துத்தான் பேச்சு நடத்தியது. இதனால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கிறேன் என்ற பெயரில் சறுக்கியது. இதன் விளைவை வடக்கு மாகாண சபையில் இனவழிப்பு தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்த அக்கட்சியால், கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சறுக்கல்தான் இன்று மக்களால் நிராகரிப்பட்டவர்களை கிழக்கில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை அறிவித்தே ஆகவேண்டும்.

மேலும், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தெளிவாக சிந்தித்து இம்முறை வாக்குகளை அளிக்க வேண்டும். வடக்கு – கிழக்கு மக்களுக்கு முக்கிய பிரச்சினைகள் இருந்தாலும் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினைத் தீர்வே அனைத்து விவகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். வடக்கு – கிழக்கு மக்கள் எல்லைகளால் பிரிந்து நின்றாலும் மனதால் இன்னமும் ஒன்றாகவே வாழ்கிறார்கள் என்பதை நிரூபிப்பதாக இம்முறை தேர்தல் வாக்களிப்பு இடம்பெற வேண்டும். தமிழர்களின் ஒன்றிணைந்தே தீர்வே தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான பேரம் பேசும் சக்தியாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து வாக்களிப்போம்.

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள்