நவீன போர் முறைக்குள் உலகம்! செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்?

image
image


தெஹ்ரானில் அணு விஞ்ஞானியை குறி வைத்துக் கொன்ற தாக்குதல் உலகம் நவீன டிஜிற்றல் போர் யுகம் ஒன்றுக்குள் நகர்வதன் அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. போர் முனைகளுக்கு வெளியே முக்கிய புள்ளிகளது வாகனங்கள் தொலைவில் இருந்து வான் வழியாக மட்டுமே குறி வைக்கப்படலாம் என்றிருந்த கதையையும் அது மாற்றியிருக்கிறது.

ஈரானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அந்த நாட்டின் அணு ஆயுத சக்தியின் ‘தந்தை’ எனவும் வர்ணிக்கப்பட்டுவந்த இராணுவ விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே(Mohsen Fakhrizadeh) செய்மதி ஊடாக இயக்கப்படக்கூடிய  தானியங்கி ஆயுதங்களால் மிக நவீன போர் உத்தி மூலம் இலக்கு வைக்கப்பட்டே வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

உலக வல்லரசுகளால் நெருங்க முடியாத ஈரானின் புலனாய்வுப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை உலுக்கிவிட்டிருக்கும் இந்தப் படுகொலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள்  தாக்குதலில்  நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

நாட்டின் இருதயப் பகுதி போன்ற தலைநகர் தெஹ்ரானில் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தனது மனைவி மற்றும் மெய்க்காவலர்கள் சகிதம் பயணித்துக் கொண்டிருந்த கார் கடந்த வெள்ளியன்று பட்டப்பகலில் நடு றோட்டில் வைத்து திடீர் தாக்குதலுக்கு இலக்கானது.

ஆயுதபாணிகள் சுமார் ஒரு டசின் பேர் கார் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர் என்றும் பின்னர் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ‘நிசான்’ பிக்கப் வாகனம் ஒன்றில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர் எனவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மெய்க்காவலர்களுக்கும் ஆயுத பணிகளுக்கும் இடையேஇடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் படுகாயமடைந்த விஞ்ஞானி பக்ரிசாதே அவசரமாக அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சமயம் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் ஆயுதபாணிகள் நால்வரது உடல்கள் காணப்பட்டன என்பன போன்ற தகவல்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

பக்ரிசாதே பயணித்த குண்டு துளைக்க முடியாத கார் துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையிடப்பட்ட நிலையில் வீதியோரமாக நிற்கும் காட்சிகள் தெஹ்ரானில் இருந்து வெளியாகின.

இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொஸாட்,  நாடு கடந்து இயங்கும் ஈரானிய எதிரணியான முஜாஹிதீன்-இ கல்க் (Mujahideen-e Khalq) அமைப்புடன் சேர்ந்து நடத்திய படுகொலை இது என்று குற்றச்சாட்டியுள்ள ஈரான், அதற்குப் பழிவாங்கும் வகையில் தக்க பதிலடி கொடுக்கத் தயாராவதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பின் பலவீனங்களைப் பகிரங்கப் படுத்தியிருக்கும் இத் தாக்குதலுக்கு அதன் பதிலடி எப்படி அமையும் என்பதை அறிவதற்காக முழு உலகமும் காத்திருக்கிறது.

அதேவேளை தெஹ்ரான் தாக்குதல் தொடர்பாக முதலில் உடனடியாக வெளியிடப்பட்ட  செய்திகள் அனைத்துக்கும் மாறாகப் புதிய தகவல்களை ஈரானிய பாதுகாப்புத் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

“தாக்குதலாளிகள் எவரும் களத்தில் இன்றி முழுவதும் தொலைவில் இருந்து இயக்கப்படும் தொழில் நுட்பம் (remote-controlled technology) மூலமே இது நடத்தப்பட்டிருக்கிறது” என்று ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்திருக்கிறார்.

திங்களன்று நடைபெற்ற அணு விஞ்ஞானியின் இறுதிச் சடங்கின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷம்கானி, “துரதிர்ஷ்டவசமாக  மிகவும் குழப்பமான ஒரு தாக்குதல் இது “என்று குறிப்பிட்டார்.

களத்தில் ஆயதபாணிகளுடன் மோதல் நடந்தது என்று முதலில் வெளியாகிய செய்தி இதன் மூலம் மறுதலிக்கப்படுகிறது.

முதலில் பிக் அப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி இயந்திரத்துப்பாக்கி ஆட்கள் இன்றியே தொலைக்கட்டுப்பாட்டு நுட்பத்தால் இயக்கப்பட்டிருக்கிறது.

தனது காரில் குண்டுகள் பாயும் ஓசை கேட்டு வெளியே இறங்கியவேளை

மூன்று குண்டுகள் விஞ்ஞானியின் உடலைத் துளைத்துள்ளன.. அதன் பின்னரே வாகனத்தில் பொருத்தியிருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

வாகனத்தில் தன்பாட்டில் இயங்கிய துப்பாக்கியுடனேயே மெய்க்காவலர்கள் சிறிது நேரம் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

தூரக்கட்டுப்பாட்டு இயங்கு முறைகள் மூலம் (remote-controlled technology) குண்டுகள் வெடிக்க வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி மூலம் தூரக்கட்டுப்பாட்டு தொழில் நுட்பத்தால்  இயக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மைக் காலங்களில் ஆட்களின்றிப் பறக்கும் ட்றோன் விமானங்கள் மூலம் ஈரானின் முக்கிய புள்ளிகள் சிலர் தரையில் இலக்கு வைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஈராக்கில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய ட்ரோன் விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவ மேஜர் ஜெனரல் காஸீம் சொலைமானி (major general Qasem Soleimani) கொல்லப்பட்டார். செய்மதியின் கட்டுப்பாட்டில் ஆட்கள் இன்றி இயங்கும் நவீன ட்ரோன்  விமானம் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய மிகத் துல்லியமான தாக்குதல் அது. ஆனால் கடைசியாக தற்போது தெஹ்ரானில் நடந்திருக்கும் தாக்குதலின் ‘தொழில் நுட்பம்’ ஈரானிய வல்லுநர்களைப் பெரிதும் குழப்பி விட்டிருப்பது தெரிகிறது.

வாகனத்தில் அல்லது வீதியோரத்தில் எங்காவது பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி தொழில் நுட்பம் ஊடாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஈரானியர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு வாகனம் – இயந்திரத் துப்பாக்கி – வெடி குண்டு ஆகிய இவை மூன்றுடன் அதி உயர் உணர் திறன் கொண்ட நவீன டிஜிட்டல் தொழிற் நுட்ப இயங்கு திட்டம் ஒன்று வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.

“அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவைக் கொன்ற தாக்குதல் களத்தில் எவரும் இன்றி முழுவதுமாக தொலைவில் இருந்தே நடத்திமுடிக்கப் பட்டிருக்கிறது” என்று ஈரானிய செய்தி ஊடகமான “பார்ஸ்” (FARS) வெளியிட்டிருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டி உள்ள இராணுவ ஆய்வாளர்கள் –

அத் தகவல் உண்மையானால் உலகெங்கும் தீவிரவாதக் குழுக்களது கைகளில்  கிடைத்துள்ள தூரக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும்  இயந்திரத் துப்பாக்கி களால் (remote-controlled machine gun) நாடொன்றின் தலைநகரில் முக்கிய பிரமுகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதலாவது பெரும் தாக்குதலாக அது இருக்கும் என்று கூறியுள்ளனர்.

நெருங்க முடியாத இலக்கு ஒன்றை மிகத் தொலைவிலேயோ அன்றி வேறு ஒரு நாட்டில் இருந்தோ  தாக்கும் போது அதில் தவறு நேரும் பட்சத்தில் பெரும் தோல்வியாக முடிவதுடன் அதில் பயன்படுத்தப்பட்ட அதி உயர் தொழில் நுட்ப சாதனங்கள் எதிரியின் கைகளில் சிக்கிவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

இதனைச் சுட்டிக் காட்டுகின்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சந்தேகிக்கின்றனர்.

இயந்திர மனித(Robot) தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரத் துப்பாக்கிகள் சிரியாவில் ஐ. எஸ். தீவிரவாதிகள் உட்பட சில கிளர்ச்சிப் படைகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ளன.  ஆனாலும் எல்லைதாண்டி எதிரியின் களத்துக்குள் – அதுவும் ஈரா‌ன் போன்ற இரும்புத் திரைக் கட்டுக்காவல்கள் நிறைந்த நாடொன்றின் தலைநகரில்- அந்த நவீன துப்பாக்கிகள் வெடித்திருப்பது உலகெங்கும் போர் உத்திகளின் போக்கில் ஒருபெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

வால்களை விட்டு விட்டு நேரடியாகத் தலைகளை இலக்கு வைக்கும் 21 ஆம் நூற்றாண்டின்  நவீன தாக்குதல் பணிகள், வான் வழியாக ட்ரோன் விமானங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படலாம் என்று இருந்துவந்த எதிர்பார்ப்புகளையும் இந்தச் சம்பவம் தவிடுபொடியாக்கி இருக்கிறது

குமாரதாஸன், பாரிஸ்

https cdn.cnn .com cnnnext dam assets 201127124652 file 02 mohsen fakhrizadeh iran nuclear scientist 2019