கழிவு தேயிலை ஏற்றுமதி:பிரதான சூத்திரதாரியை கைது செய்ய நடவடிக்கை!

unnamed 1 3
unnamed 1 3

இலங்கை தேயிலையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவு தேயிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வியாபாரத்தின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்காக சுங்க திணைக்களத்தினர் நீதிமன்றிற்கு சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரி இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவு தேயிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிளகாய் தூள் மற்றும் அரசி மா என்ற போர்வையில் வெளிநாடுகளுக்கு இவ்வாறு கழிவு தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு 70 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலை அடங்கிய நான்கு கொள்கலன்கள், டுபாயில் அண்மையில் கைப்பற்றப்பட்டதோடு அவை எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்படவுள்ளன.

இதற்கு முன்னர் கழிவு தேயிலை அடங்கிய 160 பாரவூர்தி கொள்கலன்கள் ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பான பிரதான சந்தேக நபரே தற்போதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் சந்தேகநபருக்கு சுங்கப்பிரிவினரால் பல தடவைகள் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் மருத்துவ அறிக்கைகளை சமர்பித்து அவர் மன்றில் முன்னிலையாக தவறியுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் கொலன்னாவை பகுதியை சேர்ந்தவர் என்பதோடு தற்போது கைது நடவடிக்கைகளை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.