முறிகண்டி மாதிரிக் கிராமத்தில் இருக்க இருப்பிடமின்றி தவிக்கும் குடும்பம்!

received 594066388372890
received 594066388372890

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுருகண்டி கிராம அலுவலர் பிரிவின் திருமுறிகண்டி மாதிரிக் கிராமத்தில் இருக்க இருப்பிட மின்றி நான்கு குழந்தைகளுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறார் துரைச்சாமி தியாளன்

நுவரெலியா மாவட்டத்தை  சேர்ந்த துரைச்சாமி தியாளன் கிளிநொச்சியில் தொழில் புரிந்து வந்த நிலையில் 2018 ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் குடும்பமாக கிளிநொச்சியில் வசிக்க வந்துள்ளார்.  

கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் சுமார் ஒருவருடம் வசித்து வந்தநிலையில் குறித்த குடும்பம் வசித்த காணியில் எழுந்த சிக்கல் நிலை காரணமாக இந்த குடும்பம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவின் முரசுமோட்டை  கிராம அலுவலர் பிரிவில் வசித்து வந்த நிலையில் அங்கும் இவர் வசித்த வீட்டில் உரிமையாளர்கள் வந்த நிலையில் 8 ம் மாதம் முதல் கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவில் இருந்து சட்ட ரீதியாக பதிவுகளை நீக்கி ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் திருமுருகண்டி கிராம அலுவலர் பிரிவின் திருமுறிகண்டி மாதிரிக் கிராமத்தில் பிறிதொரு நபருடைய வீட்டில் தற்காலிகமாக குடியிருக்கிறார்.
இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் குடும்ப பதிவை மேற்கொள்ள முடியாத நிலையில் திண்டாடுவதாகவும் வீடு தேவையற்ற பலர் வீடுகளை கட்டி வீட்டில் வசிக்காத போதும் வாழ வழியின்றி தவிக்கும் எனக்கு ஒரு இடம் தந்து வாழ வழிசெய்ய மறுப்பதாகவும் பதிவு செய்யப்படாததால் பிள்ளைகளை கூட பாடசாலை அனுப்ப முடியாமல் திண்டாடுகிறார்.

தன்னுடைய இறுதி மகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் மனைவி மகளை வைத்தியசாலை கொண்டு சென்று வைத்திருக்கும் நேரங்களில் தனது மூன்று சிறு பிள்ளைகளையும் அழைத்து சென்று விறகு வெட்டி விற்பனை செய்து தனது வாழ்வை கொண்டு நடத்த பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்.

பாடசாலை செல்ல ஆர்வமுடைய தனது பிள்ளைகளை  பாடசாலை கொண்டு சென்று சேர்க்க பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுப்பதாகவும் நாளாந்த உணவுக்கும் தனது இறுதி மகளின் மருத்துவ செலவுக்கும் திண்டாடி வருவதாகவும் தனக்கு காணி வீட்டினை பெற்றுத்தர அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் தனது வாழ்வாதாரத்துக்கு தனது பிள்ளையின் மருத்துவ செலவுகளுக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்கள் தனக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.