கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி – தமிழக முதல்வர்

Edappadi Palanisami
Edappadi Palanisami

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க களத்தில் நின்று பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மக்களுக்கு உரையாற்றிய அவர், “அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி முதல் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒருவருக்கு தலா 2 முகக்கவசங்கள் விகிதம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரேசன் கடைகளில் முகக்கவசம் வழங்கப்படும்.

நாட்டிலேயே குணமடைவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 57 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காய்ச்சல் முகாம்களால் கரோனா தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 70 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1,196 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தளர்வுகள் அறிவிப்பது, பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.