வெற்றிகரமாக பொருத்தப்பட்டது- விபத்தில் உயிரிழந்தவரின் கல்லீரல் !

download 3
download 3

தஞ்சாவூர் வீதி விபத்தில் சிக்கிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் தானமாக வழங்கப்பட்ட அவரது உடலுறுப்புகளில் இருந்து கல்லீரல் பெறப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி 25 வயது இளம் பெண் பாடுகாயமடைந்திருந்தார். அவரை தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்திருந்தனர். இந்நிலையில் மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயது நோயாளிக்கு கல்லீரல் மாற்றீடு செய்ய வேண்டிய நிலையில் இளம்பெண்ணின் கல்லீரல் பொருத்தமாக இருந்ததை மருத்துவர்கள் உறுதிசெய்தார்கள்.

இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு உயிரிழந்த இளம்பெண்ணின் கல்லீரலை எடுத்துச் செல்ல நடிவடிக்கை எடுக்கப்பட்டது. அதிவிரைவாக கொண்டுசேர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினரது ஒத்துழைப்பு பெறப்பட்டது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு இடையேயான 190 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணிநேரம் 50 நிமிடங்களில் விரைவாக கடந்து கொண்டு சேர்க்கப்பட்டதுடன் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

உடலுறுப்பை எடுத்துச் சென்ற அவசர நோயாளர்காவு வண்டியை 140 கிலோ மீட்டர் வேகத்தில் அதேநேரம் கவனத்துடன் செலுத்திச் சென்ற சாரதி சுப்ரமணியன் தெரிவிக்கையில், ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் அம்புலன்ஸை கவனத்துடன் இயக்கினேன்.

அவசர நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். பொலிசார் போக்குவரத்தை திறம்பட சரிசெய்தனர். இது போன்று பல நேரங்களில் சவால் நிறைந்த பணிகளை செய்திருக்கிறேன் என்று கூறினார்.

அவசர நிலையில் வேகத்துடனும் அதே நேரம் விவேகத்துடனும் செயற்பட்டு விரைவாக உடலுறுப்பை கொண்டுசென்று சேர்த்த அவசர நோயாளர் காவு வண்டி ஓட்டுனர் சுப்ரமணியனுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.