இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

224
224

உலகையே உலுக்கும் கொரோனாவால் இந்தியளவில் இதுவரை 28 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகிய நிலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதையடுத்த நிம்மதிப் பெருமூச்சு விட்ட இந்தியர்களுக்கு திடீர் அதிர்ச்சியாக மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து இந்தியா திரும்பியிருந்த டெல்லியைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் இத்தாலி, வியன்னா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு ஏர் இந்திய விமானத்தின் மூலம் டெல்லி திரும்பியிருந்தார்.

டுபாயில் இருந்து ஹைதராபாத் திரும்பியிருந்த சொப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் பெங்களுரில் இருந்து பேருந்து மூலம் ஹைதரபாத் திரும்பியது கண்டறியப்பட்டு அவர் பயணித்த பேரூந்தில் பயணித்த சக பயணிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

இத்தாலிக்கு சுற்றுலா சென்று திரும்பிய 69 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று செவ்வாய்க் கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கும் சென்று திரும்பிய டெல்லி நொய்டாவை சேர்ந்தவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரது வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்விற்கு அதிகமான குழந்தைகள் சென்றதால் அக்குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம் மூடப்பட்டு பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பிய அனைவரது இரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு டெல்லி ஆக்ரா பகுதியில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி இந்தியளவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கான தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் எனவும் இதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனாவின் நேரடித்தாக்கம் அதிகரித்து உலகளாவிய அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் மூலம் இந்தியாவிற்குள்ளும் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்களில் இத்தாலிக்கு சுற்றுலா சென்று திரும்பிய 16 பேரும் உள்ளடக்கமாகும். இவர்கள் இந்தோ-திபெத் எல்லையில் பாதுகாப்பு படையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொடுசெல்லப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தியாவிற்குள் விமான நிலையங்களுடாக நுழையும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.