நிர்பயா கொலை வழக்கு: நான்கு குற்ற வாளிகளுக்கும் அதிகாலை தூக்கு!

8 jj
8 jj

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் டில்லி திகார் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் கூட்டுப் பாலியல் வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டில்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை டில்லி மேல் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக குற்றவாளிகள் 4 பேரும் ஒவ்வொருவராக மறு ஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களைத் தூக்கில் போடுவது பல தடவைகள் தள்ளிவைக்கப்பட்டது.குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் இன்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கிலிடுமாறு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக திகார் சிறையின், மூன்றாம் எண் சிறையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

நீதி கிடைத்துள்ளது”எனது நாடு நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது” என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி உருக்கமாகத் தெரிவித்தார்.நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நிர்பயாவின் தாயார் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-“நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கின்றது. 

என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியைப் பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது. ஆனால், இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன்” – என்றார்.

 இதேவேளை, நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, திகார் சிறை வாசலில் திரண்ட பொதுமக்கள் இனிப்புக்கள் பரிமாறிக் கொண்டாடினர்.இந்தியாவின் தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள், “பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷம் எழுப்பி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.