எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு வழங்குவோம் : ஈரான்

0 ooo
0 ooo

இஸ்ரேலுடன் போராடும் எந்தவொரு தேசத்தையும் அல்லது குழுவையும் ஈரான் ஆதரிக்கும் என்று ஈரானின் மூத்த தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து அரபு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்த கருத்து பார்க்கப்படுகின்றது.

கமேனி தனது அதிகாரப்பூர்வ ஆங்கில மொழி டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ள ஒரு பதிவில், ‘சியோனிச ஆட்சியை எதிர்க்கும் மற்றும் போராடும் எந்த நாட்டையும் அல்லது எந்தவொரு குழுவையும் நாங்கள் ஆதரிப்போம், உதவுவோம், இதைச் சொல்ல நாங்கள் தயங்குவதில்லை’ என பதிவிடப்பட்டுள்ளது.

இதேபோல, கமேனி தனது அதிகாரப்பூர்வ ஃபார்ஸி மொழி டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ள இன்னொரு பதிவில், ‘இஸ்ரேல் அரசாங்கத்தை நீக்குவது என்பது யூதர்களை ஒழிப்பதாக அர்த்தமல்ல. யூத மக்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இஸ்ரேலை வெளியேற்றுதல் என்றால் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் யூத மக்கள் தங்களது சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டினரையும், நெத்தன்யாகு போன்ற குற்றாவாளிகளையும் வெளியேற்றுவதே’ என குறிப்பிட்டுள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் ஈரான் மற்றும் சிரியா படையினர் மீது இஸ்ரேல் அவ்வப்போது விமானத் தாக்குதலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.