கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் முடிவு!

1 e
1 e

ஈரானில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முடக்கப்பட்டிருந்த சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவிய ஆரம்பத்தில் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த ஈரான், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்தநிலையில், அவற்றில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் வர்த்தக நிலையங்கள், மத ஸ்தலங்கள் மற்றும் கலாசார நிலையங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஈரானில் உள்ள தொல்பொருள் கலாசாலைகள் மற்றும் கலாசார நிலையங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளன.

உலகெங்கும் வாழ் இஸ்லாமியர்களால் நாளை ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் குறித்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டின் மத ஸ்தலங்கள் மக்கள் பாவனைக்காக விடப்படும். நாட்டின் அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்பலாம். நாம் கொரோனா இடர்பாட்டின் மூன்று கட்டங்களை கடந்துவிட்டோம்’ என கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஈரானில் இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 650க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 7,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.