ஜி7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த டிரம்ப்: சீனா ஆத்திரம்

i3 21
i3 21

ஜி7 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை அழைத்திருப்பது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜி7 மாநாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி உலகப் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஜி7 மாநாட்டினை அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்டம்பருக்கு ஒத்தி வைத்துள்ளார், மேலும், இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென்கொரியா நாடுகளையும் சேர்த்து ஜி11 என மாற்றுவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் மோடியை டிரம்ப் அழைத்திருந்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறியதாவது, ‘ அனைத்து சர்வதேச மாநாடுகள் மற்றும் அமைப்புகள் நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை, உலக அமைதி, வளர்ச்சி போன்றவற்றை உறுதி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக சிறிய வட்டத்தை நாடுவது தோல்வியில் தான் முடியும்’ இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப்போர் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான சங்கிலி தொடர்பினை உடைக்க டிரம்ப் முயன்று வருவதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.