சவக்குழியில் வீசப்பட்ட கொரோனாவால் இறந்தவரின் உடல் !!

01
01

கொரோனா தொற்றுள்ளவரின் உடலை சுகாதாரப் பணியாளர்கள் சவக்குழிக்குள் அலட்சியமாக வீசிச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் இதுவரை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்கள் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு தனது உறவினர் வீட்டுக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று காலை 11 மணிக்கு மயங்கி விழுந்திருக்கிறார்.

உடனே உறவினர்கள், அவரை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையில் அவரது உடலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வில்லியனூர் கோபாலன் கடை இடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழுக் கவச உடையில் இருக்கும் 4 சுகாதாரப் பணியாளர்கள் ஆம்புலன்ஸில் இருந்து உடலை ஸ்ட்ரெச்சர் மூலம் எடுத்து வருகிறார்கள். அங்கு ஏற்கெனவே தயாராக தோண்டி வைக்கப்பட்டிருந்த சவக்குழிக்குள் வீசிச் சென்ற காட்சிகள் பார்ப்பவர்களின் மனதைப் பதற வைக்கின்றன.

உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது. அப்படி இருந்தும் பயத்தின் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் அதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.

இது ஒருபுறமிருக்க அந்த உடலை ஏற்றிவந்த இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் குற்றுயிரும் குலையுயிருமாகக் காட்சியளிக்கிறது. அந்த உடலை இடுகாட்டுக்குள் இறக்குவதற்காக அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரிவர்ஸ் கியர் போடுகிறார்.

ஆனால், ரிவர்ஸ் கியர் சரியாக விழாததால் அதனுடன் போராட்டம் நடத்துகிறார் ஓட்டுநர். அந்த முயற்சியின்போது அடிக்கடி ஆஃப் ஆகிவிடுகிறது அந்த ஆம்புலன்ஸ். அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர், ஐயோ.. இதெல்லாம் வீடியோவில் ரெக்கார்டு ஆகிறது’ என்று புலம்புகிறார்.அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஆம்புலன்ஸ்களின் நிலை இதுதான்’ என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.