கடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம்

i3 19 1
i3 19 1

ஜோர்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம், கடைகளில் புகுந்து கொள்ளை, உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதற்கான களமாக மாறியுள்ளது. கலவரக்காரர்கள், கடைகளை அடித்து நொறுக்கி உள்ளே சென்று, கைகளில் கிடைத்த பொருட்களை திருடி செல்கின்றனர்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் பொலிஸ்காரர் ஒருவர் கழுத்தில், கால் முட்டியால் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

இனப்பாகுபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறி, நாடு முழுதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாகாணங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இது பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது.

போராட்டத்தை காரணம் காட்டி கொள்ளை, திருட்டு மற்றும் பரவலான குற்றங்களாக மாறியுள்ளன. அவ்வாறு கடைகளுக்குள் நுழையும் கலவரக்காரர்கள் ஆடம்பர பொருட்களை கொள்ளையடித்து சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோக்களில், கலவரக்காரர்கள், பல நகரங்களில் கடைகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு தங்களது கார்களில் தப்பித்து செல்கின்றனர். இது போன்ற வீடியோக்கள் தினசரி வந்து கொண்டுள்ளன.

மின்னபொலிஸ் நகரில் பொலிசாரின் மிருகத்தனத்தால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு துவங்கிய போராட்டம், எதிர்பாராதவிதமாக தற்போது, அராஜகம் மற்றும் கொள்ளைக்கு உதவி வருவது பலருக்கு கவலை அளித்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள கடை ஒன்றில் நுழைந்து அங்கு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நைக் ஷூக்களை திருடி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

மக்கள் கடைகளை மட்டும் கொள்ளையடிக்காமல், மற்றவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்ததையும், எடுத்து சென்று விடுகின்றனர்.

சிலர் கார்களை கடைகள் முன்பு நிறுத்திவிட்டு, அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்து கைகளில் கிடைத்த அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்து செல்கின்றனர்.

நியூயார்க் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றின், அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடி செல்லப்பட்டன. அதேபோல் மான்ஹாட்டன் நகரில் உள்ள விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகார கடையில் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கலிபோர்னியாவின் சான்டா மொனிகா நகரில், ஒன்லைன் மூலம் ஓர்டர் செய்யப்பட்ட பொருட்களுடன் சென்ற டிரக்கை நிறுத்திய கலவரக்காரர்கள், அதில் இருந்த வற்றையும் திருடி சென்றனர்.

மேலும், பொருட்களை திருடுவதில், மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். நியூயார்க் நகரில், மூடப்பட்டு கொண்டிருந்த நகைக்கடையை தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள், அங்கிருந்த நகைகளை பறித்து செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. கலவரக்காரர்கள், அரசு மற்றும் தனியார் சொத்துகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.