கொரோனாவின் தோற்றம் குறித்து அறிய சீனாவுக்கு பயணிக்கும் உலக சுகாதார குழு

1800x1200 coronavirus 1
1800x1200 coronavirus 1

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவொன்று சீனாவுக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழு எதிர்வரும் வாரம் சீனாவுக்கு செல்லவுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை  தெரிவித்தார்.

மேலும் இந்த வைரஸின் தோற்றம் குறித்து அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வரும் நிலையில், இந்த வைரஸ் எவ்வாறு பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்துகொண்டால்தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

உலகை அச்சுறுத்தம் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. சீனாவின் வுகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

எனினும் வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து, கொரோனா வைரஸ் வுகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு ஏனைய நாடுகளுக்கும் பரப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.

அதேநேரம் அமெரிக்க படைவீரர்கள் இந்த வைரஸை சீனாவில் பரப்பியதாக சீனா குற்றம் சுமத்தும் நிலையில், அதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.