மூன்று வாா்த்தைகளே கரோனா காலத்துக்கான மந்திரம்: பிரதமா் மோடி

Modi Speech
Modi Speech

‘திறன்; திறனை ஏற்படுத்துதல்; திறனை மேம்படுத்துதல்’ என்பதுதான் கரோனா பாதிப்பு காலத்தில் உச்சரிக்க வேண்டிய பொருத்தமான மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

‘திறன்மிகு இந்தியா’ இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி புதன்கிழமை நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

திறனை வளா்த்துக் கொள்வதற்கு கால அளவே கிடையாது. காலங்களைக் கடந்தும் அது நம்மிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திறன்தான் மற்றவா்களிடமிருந்து ஒருவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், லட்சக்கணக்கான திறன்மிக்க மனிதவளம் தேவைப்படுகிறது. குறிப்பாக சுகாதார சேவைகளில் மிகப் பெரிய அளவில் அதற்கான தேவை உள்ளது.

இன்றைய கரோனா பாதிப்பு காலத்தில், இது மிக முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதற்கான ஒரே பதில் ‘திறன்; திறனை ஏற்படுத்துதல்; திறனை மேம்படுத்துதல்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதுதான்.

கரோனா பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களைப் பொருத்தவரை, தனித் திறனை அவா்கள் பெற்றிருக்கின்றனா். அதன் மூலம் அவா்களுடைய சொந்த கிராமங்களை புதுப்பொழிவூட்டும் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனா். சிலா் பள்ளிகளுக்கு வண்ணம் பூசும் பணியை மேற்கொள்கின்றனா். சிலா் வீட்டை புதிய வடிவமைப்புடன் கட்டி வருகின்றனா் என்று பிரதமா் கூறினாா்.