அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிடப் போவதில்லையென சீனா அறிவிப்பு!

102396532 4217056c 4b13 43cd 949d ae495b82f365
102396532 4217056c 4b13 43cd 949d ae495b82f365

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒருபோதும் தலையிடப் போவதில்லையென சீனா தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனல்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் களத்தில் உள்ளார்.

இந்தத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஊடுருவி தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்க தேர்தலில் தலையிட முயற்சி செய்வதாக அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிலையத்தின் இயக்குநர் வில்லியம் இவானினா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், மூன்று நாடுகளும் இணையம் வழியாக தவறான தகவல்களை பரப்பி வாக்காளர்களிடம் தங்களின் செல்வாக்கை செலுத்த முயற்சி செய்கின்றன.

தேர்தலில் ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெறக் கூடாது என்பது சீனாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பது ரஷ்யாவின் விருப்பமாக உள்ளது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்திருந்த குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.

இது குறித்து சீன தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அந்நாட்டடின் உள் விவகாரம் என்றும், அதில் சீனா ஒருபோதும் தலையிடாது என்றும், அதில் சீனாவுக்கு விருப்பமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.