மத்திய கிழக்கு வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல்

bul bul
bul bul

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் நோக்கி நகரவுள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை
நிலையம் அறிவித்துள்ளது.

இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய ‘புல்புல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரவுள்ளது.

இதற்கிடையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காணப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் பெயரை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்பட்டது. தொடர்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வியாழக்கிழமை மாலை ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கே 560 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையவுள்ளது. மேலும், இந்தப் புயல் 9ஆம் திகதி வரை வடக்கு, வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் புவியரசன் வியாழக்கிழமை தெரிவிக்கையில் ‘புல்புல்’ புயல் மேலும் தீவிர புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் நோக்கி நகரவுள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மணிக்கு 85 கிலோ மீட்டர் முதல் 105 கிலோமீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதுபோல, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 115 கிலோ மீற்றர் முதல் 145 கிலோமீற்றர் வரை வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு நவம்பர் 8ஆம், 9ஆம் ஆகிய திகதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மிதமான மழை வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.