பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை என்கிறார் சார்ள்ஸ்

charless
charless

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறும் அரசாங்கம் தமது இருப்பை தக்கவைக்கவும், வாக்கு வங்கியை பாதுகாக்கவும் பாதுகாப்புப்படைகளை பலப்படுத்துகின்றது. 

யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து தற்போது வரையில் பாதுகாப்புக்கு மாத்திரம் 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (22), வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கொவிட் தொற்று ஒரு காரணமாக இருந்தாலும் கூட நாட்டின் தவறான பொருளாதார கொள்கையும் முகாமைத்துவமுமே பிரதான காரணமாகும். 

பாதுகாப்பிற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குவதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாகும். யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பிற்கு 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமையென அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் பாதுகாப்பு படைத்தரப்பே இந்த நாட்டுக்கு சுமையாகும். 

ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை தக்கவைக்க இராணுவ ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வாக்கு வங்கியை தக்கவைக்கவுமே இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். 

அரச சேவையில் நிபுணத்துவ அதிகாரிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றனர்.

பயங்கரவாத தடை சட்டம் காரணமாக வெளிநாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் முதலீடுசெய்ய தடையாக உள்ளது. 

குறிப்பாக உலகப்பரப்பில் உள்ள ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் அதிகம் பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பயங்கரவாத பிரிவுக்கு அழைத்து பயமுறுத்துவதும் அவர்களுடைய முதலீட்டை தடுக்கின்றது. 

இலங்கைக்கு வருமானத்தை தருகின்ற சுற்றுலாப்பயணிகள் மிக முக்கியமானதாகும். இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்களில் 50 வீதமானவர்கள் வடக்கு கிழக்கின் புலம்பெயர் தமிழர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல் வடக்கு கிழக்கு மீனவர்கள், விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பதட்டமான சூழலில் உள்ளனர். 

தமிழர்களின் இருப்பை அழிக்க அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருகின்றது. அவசரமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றை நாம் கண்டிக்கின்றோம் என்றார்.