கதிர்காமர் 2.0 – சுமந்திரனும் உருவாக்கிய சிறிதரனும்

aaaasi
aaaasi

ஒரு காலத்தில் அரசியல் தலைவர்களின் அடையாளம் என்பது உண்மையான தியாக வாழ்வும் தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையுமாக இருந்தது. ஒப்பீட்டளவில் மேற்குலகில் நாகரிகமான நவீனத்துவமான தலைவர்கள் சிலரை கண்டாலும் கீழைத் தேயத்தில் குறிப்பாக இந்திய இலங்கைச் சூழலில் அரசியல் தலைவர்கள் என்பது மிகக் கொடூரமான தந்திரிகளாக, வியாபாரிகளாக உருப்பெற்று வருகின்றனர். ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் பெருந்தொகையான இளைஞர்கள் தமது உயிரை ஆகுதியாக்கிய மண்ணிலும் பதவிக்கும் பணத்திற்குமான வியாபார அரசியல் தலை தூக்கியிருப்பது வேதனை தரும் விடயம்.

ஒரு சமூகப் பொறுப்புள்ள ஊடகமாக ஊடக அறத்தின் வழி நின்று வெகுசனத் திரள்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்களாக இந்த விடயங்கள் குறித்து பாரபட்சமற்ற வகையில் குரல் எழுப்பி வருகிறது தமிழ்க்குரல். அந்த வகையில் தற்போதும் ஒரு முக்கிய விடயம் ஒன்றை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அறத்தை கொண்டவர்களாக உள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் வருகின்ற 13ஆம் திகதி ஆரம்பமாக இருக்கிறது. இதில் இலங்கை குறித்த விடயம் முக்கிய பேசு பொருளாக பேசப்படவுள்ளது. “இந்த மாதம் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 48ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் கடந்த மார்ச் மாத அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46-1 இலக்க தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லற் அம்மையார் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வாசிக்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்மைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதில் இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இலங்கை அரசின் குற்றங்களை சமப்படுத்துவதுடன் அது மனித உரிமைப் பேரவையில் வலுவிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐநாவுக்கு எடுத்துச் செல்லுவதாக கடந்த காலத் தேர்தல்களில் வாக்களித்து வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்து, சர்வதேச அரங்கில் பிணையெடுத்தல் அல்லது பாதுகாப்பளித்தல் பணியை ஆற்றி வந்த நிலையில் இம்முறை விடுதலைப் புலிகளை பலியிட்டு தமிழர்களுக்கான நீதிக்கு எதிராகவும் அரசுக்கு சார்பாகவும் காய்களை நகர்த்தி வருகின்றது.

அண்மையில் ஜி.எல். பீரீஸ் – சுமந்திரன் சந்திப்பு இதற்காகவே இடம்பெற்றதா என்பதும் தற்போது வெளிச்சமாகின்றது. கூட்டமைப்பின் குறித்த ஆவணத்தில் புலிகள் பற்றிய விடயம் பான்கீமூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சாக்குப் போக்கு சொல்லப்படுகிறது. பான்கீமுன் அறிக்கையில் அவ்வாறு சொல்லப்படுவதை ஏன் கூட்டமைப்பு ஏற்க வேண்டும். ஏற்பதன் வாயிலாக கூட்டமைப்பும் புலிகள் போர்க்குற்றம் செய்துள்ளனர் என்பதை ஒப்புகொள்கொள்கிறது என்றே முடிவாகிறது.

தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆவணத்தை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் முதலியோர் ஒப்புக்கொண்டே தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. எனினும் வெளியில் ஒப்புக்கொள்ளாததைப் போல தனிக் கடிதங்களை ஐ.நாவுக்கு அனுப்பவுள்ளதாக கதை விடப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் அரசியலில் கதிர்காமர் 2.0 என வருணிக்கப்படும் எம்.ஏ. சுமந்திரனே இந்த ஆவணத்தை தயாரித்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் வல்லவரான சுமந்திரன், இலங்கை அரசியலில் மற்றொரு கதிர்காமராக வலம் வருகின்றார். தற்போது தனிக் கடிதம் எழுதுவதாக கதை விட்டுள்ள சிறிதரன் எம்.பி கடந்த காலத்தில் சுமந்திரனுக்காக செய்த அரசியல் ஆட்டங்களை நினைவுபடுத்துகிறோம்.

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்று வருணித்த திருவாளர் சிறிதரன், அவருக்காக தமிழ் தேசிய வாக்காளர்களின் வாக்குகளை திருடி, படுதோல்வியடைய வேண்டிய சுமந்திரனை வெற்றி பெற வைத்தார். எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியைக் கைப்பற்றவும் சுமந்திரனின் நிதி உதவிகளைப் பெறவுமே இப்படி சுமந்திரனை ஆதரிப்பதாக தனது ஆதரவாளர்களுக்கு சிறிதரன் கூறியிருந்தார்.

அடுத்த தலைவர் பிரபாகரன் நான்தான் என்று கைகளைத் தூக்கி, கைகளை நீட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிராக சூழ்ச்சிகளுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சுமந்திரனை பாதுகாத்து அவருக்கு சாமரம் வீசுவது இழிந்த அரசியல் அல்லவா? தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்காக எந்த நிலைக்கும் சிறிதரன் இறங்குவார் என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளின் நிதர்சனத்தை கடந்த தேர்தலில் கூட்டமைப்பினர் அறுவடை செய்தனர். பெரும் தோல்விகளை பின்னடைவுகளைச் சந்தித்தனர். தற்போதும் தமது துரோகங்களையும் பதவிப் பேராசைகளையும் தொடர்ந்தபடி சுயநல அரசியல் செய்து மாவீரர்களைக் காட்டிக் கொடுத்து, மக்களின் நீதிக்கான பயணத்தை பின்னடைவுக்குத் தள்ளும் சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கு வரும் காலம் தீர்ப்பளிக்கும்.

ஆசிரியர் பீடம் –தமிழ்க்குரல்.