அரிச்சுவடி தெரியாமல் அறிவுரை கூற முனையும் கஜேந்திரகுமார்!

ka
ka

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச தொடர்பாளராக இருந்த கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

கொழும்பிலிருந்து சூம் தொழில்நுட்பம் மூலம் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தை அவர் முன்வைத்திருந்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் போர் குற்றம் இழைக்கவில்லை என்று கூறிய அவர் விடுதலைப் புலிகள் மீதும் கே.பி., கருணா, டக்ளஸ், புளொட் மீதும்  விசாரணைகளை வலியுறுத்தியிருந்தார்.

கஜேந்திரகுமார் இந்த விசாரணைக் கோரிக்கைகளை எந்த அடிப்படையில் – நோக்கில் வரையறை செய்து கோரினார் என்பதில் தெளிவு இல்லை. ஆனால், இதே கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் முன் வைத்தபோதிலும் அது குறித்து தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், அவர்களுக்கு புலிகள் மீதான சுமந்திரனின் பார்வை தெள்ளத்தெளிவாகவே தெரியும். அதனால் அவர்கள் அவரின் இவ்வாறான கருத்துக்களை கணக்கிலேயே எடுப்பதில்லை.

ஆனால், தம்மை விடுதலைப் புலிகளாகவே உருவகித்துக் கொண்டு செயற்படும் – சுருங்கச் சொல்லின் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் 2.0 என்பது போல் காட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இப்போது இதே கருத்தை முன் வைத்துள்ளது. வெறுமனே வாக்கு அரசியலுக்காக மட்டுமே விடுதலைப் புலிகளையும் – அவர்களின் தியாகத்தையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலமும் “எங்கப்பா குதிருக்குள் இல்லை” என்ற பாணியிலேயே செயற்படுவது வழமை. அந்தப் பாணியிலேயே இப்போது கே.பி. மீதான அவரின் விசாரணை கோரிக்கையும்  என்பதை விளங்குவதற்கு கே. பியின் போராட்ட வாழ்வை நினைவு கூருவது பொருத்தமானது.

தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த காலத்திலேயே கே.பியின் பேராட்ட வாழ்வும் கிட்டத்தட்ட ஆரம்பமாகிவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இன்றிருப்பவர்களில் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஆனால், அவர் ஆரம்பத்தில் பகுதிநேர உறுப்பினராகவே செயற்பட்டு வந்தார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த செலவராசா பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களான குட்டிமணி, தங்கதுரையின் கைதின் பின்னர் (1981) பல்கலைக்கழக கல்வியை துறந்து புலிகள் இயக்கத்துடன் முழுநேர உறுப்பினராக சேர்ந்து இயங்க வேண்டியவரானார்.

அச்சமயம், விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்த ராகவனே ஆயுதங்கள் தொடர்பான விடயங்களை கையாண்டிருந்தார். ஆனால், கே.பியின் வரவுக்கு பின்னர் அவர் வெற்றிகரமாக கையாண்ட சில நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்தன. இந்நிலையில்தான், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட தமிழீழ இலட்சியத்தை நோக்காகக் கொண்டு இந்திய அரசாங்கம் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு ஆயுதத்துக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் கூட இந்தியா மிகத் துல்லியமான கணக்கை வைத்திருந்தது.

இதே நிலை நீடித்தால் தமிழரின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் பிடிக்குள் – கட்டுக்குள் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் சொந்தமாக ஆயுதங்களை வாங்கவும் – பயிற்சி முகாம்களை சொந்தமாக நடத்தவும் முடிவு செய்தனர். இந்தியாவின் நடவடிக்கைகள் இதே விதத்தில் தொடர்ந்தால், தாம் ஒருநாளில் இந்தியாவையே எதிர்க்க நேரிடும் என்று அவர்கள் நம்பினர். அவர்களின் இந்த முடிவும் – தூர நோக்கு மிக்க செயற்பாடுகளும் தான் விடுதலைப் புலிகளை இந்தியாவால் மற்ற அமைப்புகளைப் போன்று தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகளில் கணிசமான வெற்றியைப் பெற்று தந்ததில் அவர்களின் சொந்த முயற்சியில் பெறப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. சொந்தமாக ஆயுதங்களை  வாங்குதல் என்ற விடுதலைப் புலிகளின் தலைமையின் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்தான் இந்த கே. பி., இவர் வாங்கிக் குவித்த ஆயுதங்கள் – போர் தளபாடங்கள்தான் விடுதலைப் புலிகளை பலமான மரபு வழி போரட்ட அமைப்பாகவும் – முப்படை கட்டுமானம் கொண்ட அமைப்பாகவும் வளர்ச்சி பெற வைத்தது.

ஆயுதங்களை – போர் தளபாடங்களை வாங்குவது – அவற்றை புலிகள் அமைப்பிடம் சேர்ப்பிப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. அனைத் துலக நாடுகளின் சட்டத்தின் படி இவை சட்டவிரோதமானவை, அதுமட்டுமல்ல, ஏமாற்றுக்கள் – சூழ்ச்சிகள் – காட்டிக்கொடுப்புக்கள் – நிறைந்த இந்த கறுப்பு சந்தைக்குள் வெற்றிகரமாக ஊடுருவுவது – வெற்றிகரமாக ஏமாறாமல் ஆயுதங்களை வாங்குவது – அவற்றை அரசுகளின் கண்களுக்கு தெரியாமல் கடத்துவது – போராட்டகளத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பதை நினைத்தும் கூட பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில ஆண்டுகள் நீடித்தாலும் நீண்டகாலம் நீடிப்பது என்பது நெருப்பாற்றில் நீந்துவது போன்றது. இந்த நெருப்பாற்றில் நீந்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை உலகமே வியந்து பார்க்கச் செய்ததற்கு அடிக்கல்லாக இருந்தவர்களில் கே.பியின் பங்கு மிக மிகக் காத்திரமானது. தலைமையின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசமும் – தலைமை அவர் மீது கொண்ட நம்பிக்கையும் போராட்டம் – தலைமை மீது அவர் கொண்டிருந்த நேசிப்பும்தான் இயக்கத்தின் ஆரம்பகாலத்திலேயே பெருந்தொகை பணத்தை கையாள முடிந்தது.

ஆனால், போராட்டம் முடிவுக்கு வந்த பின்னால், 2010இன் பின்னரான காலப் பகுதியில் கே.பி. தொடர்பான விடயங்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டன. ஆனால், 2009 மே 18ஆம் நாளின் பின்னராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக கே.பி. அறிவிக்கப்பட்டாலும் கூட அதில் பல குழப்பங்கள் நிலவின. இவ்வாறான குழப்பமான சூழ் நிலைகளே கே.பி. கைதாகும் நிலை வரை சென்றிருந்தது.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. தற்போது இராணுவக் காவலில் – வீட்டு சிறையில் இருக்கிறார். அவர் எங்கு செல்வதானாலும், இராணுவ அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். அவர் செல்லும் இடங்களுக்கு இராணுவத்தினரும் செல்வர். அவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார் போன்ற விடயங்கள் அனைத்தும் கவனிக்கப்படும். இவ்வாறான நிலையிலேயே கே.பி. இப்போது வாழ்கிறார்.

இந் நிலையில்தான் சுமந்திரனை பின்பற்றி கஜேந்திரகுமாரும் கே.பி.மீதும் விசாரணையை வலியுறுத்தியுள்ளார். கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, புளொட் அமைப்புகளின்மீதும் அவர் சர்வதேச விசாரணைகளைக் கோரியிருந்தார். இவர்களின் ஆரம்ப வாழ்வு விடுதலைப் போராட்டம் பற்றியதாக இருந்தாலும், பின்னாளில் இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்த நோக்கத்திற்காக போராட சென்றார்களோ, யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுடன் சேர்ந்து நின்று தமிழ் மக்களுக்கு எதிராக போராடியவர்களையும் ஒரே தராசில் நிறுத்த முற்பட்டுள்ளார்.

தமிழ் மக்களால் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட இவர்கள் மீது சர்வதேச விசாரணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது இவர்கள் போராட்டத்துக்கு எதிராக திசை திரும்பிய பின்னரான காலத்தில் அவர்கள் இழைத்த மனித உரிமைகள் மீறல்கள் – போர் குற்றங்கள் – மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு சர்வதேச அமைப்பிடமோ – நீதிப் பொறிமுறையிடமோ தமிழர் தரப்பால் கோர முடியுமா?

தவிர, இவர்களின் பட்டியலில் கே.பியை இணைக்க முடியாது. ஏனெனில், கே.பி. விசாரிக்கப்படுவாரேயானால் நூறுசதவீதம் போராட்ட காலத்தில் அவரின் செயற்பாடுகள் தொடர்புடையவையாகவே இருக்கமுடியும். ஏனெனில், முள்ளிவாய்க்காலுடன் தமிழரின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், சுமார் ஆறு மாதங்களின் பின்னரே கே.பி. கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இலங்கை அரசின் கண்காணிப்பு வலயத்துக்குள் இருக்கும் அவரை வேறு எந்தக் குற்றங்களுக்காகவும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பதே உண்மையும் – யதார்த்தமும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் ஒப்பத்துடன் அனுப்பி வைத்த கடிதத்தில் விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை கோரப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.பி. மீதான விசாரணையை வலியுறுத்துவதன் மறைமுக கோரிக்கை விடுதலைப் புலிகள் மீது விசாரணையை கோருவது என்பதாகவே அர்த்தப்படும்.

தவிர, கஜேந்திரகுமார் கூறுவது போன்று கே.பி. விசாரிக்கப்படுவாரேயானால், அது தாயகத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் அந்நியப்படுத்துவதாக – தூரப்படுத்துவதாக அமையும். அதுமட்டுமின்றி புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையையும் விடுதலைப் போராட்டத்துக்கு துணைநின்ற புலம்பெயர் உறவுகளையும்கூட விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கும் கூட அது வழி சமைத்துவிடும்.

கே.பியை விசாரிக்கக் கோருதல் என்ற கஜேந்திரகுமாரின கோரிக்கையின் பின்னால் இரு விடயங்கள் தெளிவாகின்றன. கே.பியை விசாரிக்கக் கோருதலின் பின்னால் அவருக்கு நன்மையளிக்கக்கூடிய ஏதோவொரு விடயம் இருக்க வேண்டும் அல்லது அவரும் சுமந்திரனைப் போன்று இலங்கை அரசாங்கத்தின் நலனையும் விரும்பும் இரட்டை மனநிலையில் இருக்க வேண்டும்.

இவை இரண்டும் இல்லையேல், கே.பியை விசாரிக்கக் கோருவதன் மூலம் அவர், அரிச்சுவடி தெரியாமல் அறிவுரை கூறும் நபர் என்பதே தெளிவு. 

– தமிழ்க்குரல் ஆசிரியர்பீடம்