மீள இயக்கப்படுமா காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை?

r
r

வடக்கின் அடையாளத்தை சொல்வதற்கென்று பல இடக்குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.

இயக்கமற்று முற்றாக முடங்கிப்போயிருக்கிற காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் கதைகளைத்தான் இங்கே காணப்போகிறோம்.

1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மகத்தான பொக்கிசமாகத் திகழ்ந்தது. யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது.

ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழில் முடக்க நிலை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசங்களாகின. குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய இலங்கை இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரைக்கும் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளின் பின்பு அண்மையில் உயர்பாதுகாப்பு வலயங்களின் கீழிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர். அவர்களது  வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற போதும் மூடப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையின் கதவுகள் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறு மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சீமெந்துத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் காலத்திற்குக்காலம் முன்னெடுக்கப்படுவதான செய்திகளையும் அறிய முடிகிறது. 2008 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை பொறுப்பேற்று மீள ஆரம்பிக்கப் போவதான அறிவிப்புக்கள் வெளிவந்தன. இவற்றிற்கான ஆவணக் கையெழுத்துக்களும் இடப்பட்டதாகவும் தொழிற்சாலையினை புனரமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. எனினும் அந்த முயற்சி தள்ளிப்போனது.

இதனைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் அதன் ஏனைய பங்குதாரர்களும் இணைந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான தமது நல்எண்ணத்தை தெரிவித்தனர். இதற்கான பெறுமதியாக சுமார் 1.5 பில்லியன் ரூபா முதலீடு மதிப்பிடப்பட்டது. எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றி அடைய வில்லை.

ஆனாலும் இந்தியா சீனா சவுதிஅரேபியா உட்பட்ட சில நாடுகள் முதலீட்டு அடிப்படையில் சீமெந்துத் தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கு முன் வந்தன. இவற்றிற்கான நிதி முதலீடாக சுமார் நான்காயிரம் கோடி ரூபா வரை மதிப்பிடப்பட்ட போதும் செயலளவில் எவையும் வெற்றி பெறவில்லை.

இவற்றின் தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் உட்பட தமிழ்த் தலைவர்களோடு யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து தொழிற்சாலையயை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் உறுதி செய்யப்பட்டதுடன் சீமெந்து தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளையும் ஆராய்ந்தனர். ஆனால் இன்றுவரை அந்தத் தொழிற்சாலையின் கதவுகள் மீளத் திறக்கப்படவில்லை.

இவ்வாறாக தொடர்ச்சியாக இயக்கமற்ற நிலையில் காணப்படுகின்ற தொழிற்சாலையின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் அதன் மூலமாக சட்டவிரோதமான செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் பரவியுள்ளன. பொதுமக்கள் உள்நுழைய முடியாத உயர்பாதுகாப்பு வலயத்தினை சாதகமாக்கிக்கொண்டு தொழிற்சாலையிலுள்ள பாரிய இரும்பு உலைகள் பீப்பாய்கள் இயந்திரப்பாகங்கள் மற்றும் இரும்பு உபகரணங்கள் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டு பழைய இரும்பு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சுமார் 1.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தில் கொள்ளுப்பிட்டியில் அலுவலக கட்டத்தொகுதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது. இதனை ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கத்துன் நெத்தி 2015ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

இப்படியிருக்க காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உற்பத்திக்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டம் ஒன்றை  மிக அண்மையில் தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக கைத்தொழில் அமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 8ம் திகதி  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றல் தொடர்பாக கவனம் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பின்வருமாறு காணப்டுகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்திக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கமைய குறித்த வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்குவதற்கு அவ்விடத்தில் கண்காணிப்புச் சோதனையை நடாத்தி பரிந்துரைகள் அடங்கிய தரவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்கள்இ வடிவமைப்புக்கள் இயந்திர உபகரணங்கள் மற்றும் இரும்புத்துண்டுகள் மற்றும் வார்ப்புக்கள் போன்றவற்றை அரசாங்க பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தின் பெறுகைச் செயன் முறையைப் பின்பற்றி குறித்த பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்பாக பல்வேறு விதமான தரவுகளும் தகவல்களும் காலத்திற்குக் காலம் வெளியிடப்பட்டு வருகிற போதும் குறித்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் தமது விருப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் குறித்த பிரதேசத்தில் வாழும் அனேகமான மக்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தொழில் வாய்ப்பு உறுதி செய்யப்படும். அது மட்டுமன்றி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கொண்டு வரப்படுகின்ற சீமெந்து பைகளின்  போக்குவரத்து மற்றும் இதர செலவீனங்களைக் கருத்தில் கொண்ட விலைத்தளம்பல் நிலையானது சீர்செய்யபடுவதற்கான வாய்ப்புக்ளும் ஏற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொருளாதார ரீதியாக பல்வேறு சாதக நிலமைகளை வழங்கக்கூடிய குறித்த தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அதற்கான மூலப்பொருளாகிய சுண்ணக்கல் தொழிற்சாலையை அண்ணடிய பிரதேசங்களில் அகழ்ந்து எடுக்கப்படுகிற போது தரைக்கீழ் நீருடன் கடல்நீர் கலப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் இது சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிருந்தனர். தொழிற்சாலை இயங்கு நிலையில் இருந்த காலப்பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் இன்றும் பாரிய குழிகளாக காட்சி அளிக்கின்ற நிலையில் இவை தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே இவற்றினை கருத்தில் கொண்டு குறித்த மூலப்பொருளாகிய சுண்ணக்கல்லினை சாதகமான வேறு பிரதேசங்களில் இருந்து அகழ்ந்தெடுத்து தொழிற்சாலையயை மீள இயக்குவது குறித்த பரிசீலனைகளை மேற்கொள்ள முடியும் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படுகின்ற பட்சத்தில் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப்பொருட்களில் மிக முக்கியமாக தூசுக்கள் சுவாசம் சார்ந்த பாதிப்புக்களை அயலில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தும் என்கின்ற அச்சமும் எழுப்பப்படுகின்றது. பெருமளவான தொழில்நுட்ப முறைகளை வேண்டி நிற்கின்ற இந்தத் தொழிற்சாலையில் உரியவகையிலான நவீன கழிவு சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துகிறபோது அபாயங்கள் இல்லாதொழிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஓரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அங்குள்ள நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிற்சாலைகளின் பங்களிப்பு என்பது கணிசமானது. ஆனால் அவை புத்துயிர் பெறுகிறபோது அங்குள்ள இயற்கை வளங்களினதும் மக்களினதும் நிலையான வாழ்வியலை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுவது சிறப்பு.

தமிழ்க்குரலுக்காக- சர்மிலா வினோதினி.