புலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்

ழழ
ழழ

தமிழர் பிரச்சினைக்கு தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள சட்ட ரீதியான ஒரேயோர் அதிகாரப் பகிர்வு 13ஆம் திருத்தச் சட்டம். என்னதான் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட்டபோதும், இன்றுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத,காலத்துக்குக் காலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற, நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் சில அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்படும் திருத்தமாகவே 13ஆம் திருத்தச் சட்டம் இப்போதும் உள்ளது.

எது எப்படி இருப்பினும் இன்றைய நிலையில், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோருவதே தமிழர் தரப்பின் நிலைப்பாடாக , யதார்த்த நிலையாக உள்ளது. தற்போதைய நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது. கடந்த மார்ச்சில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை சர்வதேச நாடுகளும் ஆதரித்துள்ளன.

13ஆம் திருத்தச் சட்டத்திற்கு வழிவகுத்த அல்லது இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்த , இந்திய அரசமைப்பை பின்பற்றியதாக , மாதிரியாக (model) கூறப்படும் 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவு. இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் (29.07.202)  34 ஆண்டுகள் நிறைவுறுகின்றன.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்வுத்திட்டத்தை அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. இலங்கையின் அரசமைப்பை விளங்கிக் கொள்ளாமல் அல்லது தனது நிலைப்பாட்டை தமிழர் தரப்பின் மீது திணிக்கும் அவசரகதியில் ஒரு தீர்வாக இந்த உடன்படிக்கையை இந்தியா முன்வைத்திருந்தது. இதனால் 13 ஆவது திருத்தச் சட்டம் பல குறைபாடுகளை கொண்டிருந்தது. ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பணியவைக்க இந்திய அரசாங்கம் சாம,தான,தண்ட,பேதத்தை கையாண்டது. ஆனால் அது அவரின் முன் எடுபடவில்லை.

திம்புப் பேச்சின் போது ஏற்பட்ட தோல்வியை ,அவமானத்தை போக்க  இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் , ஏற்கச் செய்வதில் இந்திய அரசாங்கம் உறுதியாக நின்றது. இதனால், ஒப்பந்தம் குறித்து எதுவும் கூறாமல் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரின் குழுவினரரையும் ‘தீர்வுத்திட்டம் குறித்த பேச்சு’ என்றுகூறி 1987 யூலை 23 அன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து சென்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரின் குழுவினரும் அசோக் ஹோட்டல் கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டனர். வெளியுலகுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த டிக்சித் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நகலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் வழங்கினார். அந்த ஒப்பந்தம் ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றதுடன் ஒப்பந்தம் கைச்சாத்தான 72 மணி நேரத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறித்து தெளிவான வரையறை இல்லை என்று ஒப்பந்தத்தின் குறைபாடுகளை புலிகளின் தலைவர் பிரபாகரன் டிக்சித்துக்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், “தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க முடியாத இந்த தீர்வுத்திட்டத்தை ஏற்க முடியாது”, என்று தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

“உங்களை இங்கேயே தடுப்புக்காவலில் வைப்போம்”, என்று மிரட்டினர் டிக்சித். “விரும்பினால் தடுப்புக்காவலில் வையுங்கள்.  நாங்கள் ஏற்க மாட்டோம்”, என்றார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனால், கோபமடைந்த டிக்சித், பிரபாகரனுக்கு தனது சுங்கானை காட்டி, “இந்த சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள் இந்திய படைகள் உங்கள் படைகளை அழித்து விடும்”, என்றார். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏளன சிரிப்புடன் “முடிந்ததை செய்து பாருங்கள்”, என்றார். இந்த பதிலால் மேலும் கோபமடைந்த டிக்சித், “மிஸ்டர் பிரபாகரன் இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்”, என்றார். அதற்கு அவர், “அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எமது மக்களை காப்பாற்றி இருக்கிறேன்”, என்று கூறினார். இதைத்தொடர்ந்து டிக்சித் அங்கிருந்து வெளியேறினார்.

விடுதலைப் புலிகளை ,அதன் தலைவர் பிரபாகரனை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்று புரிந்துகொண்ட இந்திய அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சர் எம். ஜி. ஆர். மூலம் அவரை இணங்கச் செய்ய முயன்றனர். இதற்காக அவரை அசோக் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க வைத்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் எம்.ஜி.ஆருக்கு விரிவான விளக்கம் ஒன்றை வழங்கினர். அவர்களின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எம். ஜி. ஆர்., “உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருங்கள். நான் உங்களுடன் இருப்பேன்”, என்று கூறி சென்றார்.

இறுதியாக ஒப்பந்த தினத்துக்கு முதல் நாள் யூலை 28ஆம் திகதி நள்ளிரவுவேளை ராஜீவ் காந்தியை புலிகளின் தலைவர் பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் சந்தித்தனர். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை விளக்குமாறு அன்ரன் பாலசிங்கத்திடம் தலைவர் பிரபாகரன் கூறினார்.

இதுபற்றி பாலசிங்கம் பின்வருமாறு கூறியிருந்தார், “முதலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு பற்றி சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமான நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு ,பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையறை செய்யப்பட்டிருந்தது. இந்த அரசியல் யாப்பின் கீழ் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும்  அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப் பகிர்வு என்பது இயலாத காரியம் என்று விளக்கினேன். பரந்த நிறைவேற்று அதிகாரங்களை உடைய ஜனாதிபதி முறைமை கொண்ட  ஒற்றையாட்சி அரசு ஒன்று அரசியல் யாப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டுள்ளன. இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதனை முழுமையாக ஏற்றுள்ளது. இதனால், நியாயபூர்வமாக அதிகாரப்பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பின் அடிப்படையில் மாற்றம் செய்வது சாத்தியமற்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில்  பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் மாகாண சபை மேலும் திருத்தி அமைத்து மேம்பாடு செய்யப்படலாம் என ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது. ஆனால், டிசம்பர் 19 தீர்வு யோசனைகளிலும் பல குறைபாடுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு எடுத்துரைத்தேன்”.

“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை பொறுத்தமட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களை தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களின் சொந்த நிலம் – பாரம்பரிய தாயகம். இந்த தாயக நிலத்தை பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதையும் கூறினேன். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே  நிர்வாக பிரதேசமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்படுகிறது. இது ஓர் ஆக்கபூர்வமான சாதனை. ஆனாலும் இந்த இணைப்பு தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில், வாக்கெடுப்பில் சிங்கள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வடக்கு – கிழக்கு நிரந்தரமாக பிரிக்கப்படுவதுடன் தமிழர் தாயகம் காலப்போக்கில் சிதைவடைந்து விடும் என்று விளக்கினேன். பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களை கேட்டுக்கொண்டிருந்தார் இந்திய பிரதமர்.

மேலும், “வடக்கு – கிழக்கு மாகாண சபையைக் கலைத்து விடும் ஆற்றல் அதிகாரம் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெயவர்த்தன ஒரு சிங்கள இன வெறியர். தமிழ் மக்களுக்கு அவர் நீதி வழங்குவார் என்று நாம் நம்பவில்லை“, என்றார் தலைவர் பிரபாகரன். அத்துடன், 72 மணி நேரத்துக்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வலியுறுத்துவது அநீதி. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடி , உயிர்களைத் தியாகம் செய்து பெறப்பட்ட ஆயுதங்களை 4 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு வலியுறுத்துவது என்பது, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முன்பாக , தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னதாக , எமது மக்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஆயுதங்களை கையளிக்க வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது”, என்றும் சொன்னார்.

இதற்கு பதில் அளித்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, “மாகாண சபை திட்டம் தற்காலிகமானது. அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய செய்வேன். வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படாது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்”, என்றார்.

“இந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் நலன்களை காணவில்லை. மாறாக தமிழ் மக்களின் நலனை பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் உறுதியை புரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, “ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம். எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும்”, என்றார்.

இடைக்கால அரசை உருவாக்கவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரதான பங்கு வகிக்க வைக்கவும் இரகசிய உடன்பாட்டுக்கு தயாராக இருக்கிறார் என்றும் ராஜீவ்காந்தி மேலும் கூறினார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை வழங்கப்பட்டாலும் சகல தமிழ் இயக்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இதனை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவத்தை வழங்க முடிவு எட்டப்பட்டது. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும், காவல் நிலையங்களை திறக்கக்கூடாது என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் மேலும் வலியுறுத்தினார்.

ஆயுதக் கையளிப்பு விடயத்திலும் இந்தியா கையளித்த சிறுதொகை ஆயுதங்களை மட்டும் தந்தால் போதுமானது என்று கூறப்பட்டது. ஆனால், சந்திப்பு முடிவடைந்த போது அதிகாலை இரண்டு மணி ஆகிவிட்டது. “மறுநாள் ஒப்பந்தத்தின்போது, இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் நிறைவேறப்போவதில்லை. இதெல்லாம் அரசியல் ஏமாற்று வித்தை” என்று பிரபாகரன் கூறினார். இந்தியா ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் இந்திய அரசு சார்பில் பிரதமர் ராஜீவ் காந்தியும் கையெழுத்திட்டனர்.

அன்று பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார். அத்துடன், போராட்டங்களும் கொழும்பில் இடம்பெற்றன. இதன் பின்னர்,  ராஜீவ் காந்தி அணிவகுப்பின் போது இலங்கை சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார்.

இறுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் எச்சரித்தது போன்று இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் ஒப்பந்தம் ஊடாக இந்தியா அறிமுகப்படுத்திய 13ஆம் திருத்தச் சட்டம் அர்த்தமற்றுப் போயுள்ளது. இப்போது வேறு வழியின்றி தமிழர் தரப்புகள் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரிக்கைகளை   முன் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் இலங்கை, இந்திய தரப்புகள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் மாறி மாறி அமர்ந்தவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறித்துக்கொண்டதே வரலாறாக உள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் இன்றுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத ஒரு சட்டமாக 13ஆவது திருத்தச் சட்டமே உள்ளது.

அண்மைக்காலத்தில்கூட  மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளில் ஒரு தொகை மத்திய அரசாங்கத்தின் கீழ் சென்றன. இதேபோல, மாவட்ட மருத்துவமனைகளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இது 13ஆவது திருத்தச் சட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் அனைத்து தரப்பினருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உண்மையை கூறுவதானால் இந்தியத் தலையீட்டால் தமிழர் தரப்பின் கடும் எதிர்ப்பையும் மீறிக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் இன்று சேடம் இழுத்துக் கொண்டு இருக்கின்றது என்பதே உண்மை , யதார்த்தம்.

தமிழ்க்குரலுக்காக- குமரன்