சொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்!

samam
samam

கடந்த வாரம் யாழ்ப்பாண படைத் தலைமையகம் சில ஒளிப்படங்களை வெளியிட்டிருந்தது. அதனுடன், “இராணுவத் தளபதியின் ‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். படைத் தலைமையகத்தின் விவசாயப் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.” என்ற செய்திக் குறிப்பும் வெளியாகியிருந்தது.

04 1

அந்த ஒளிப்படங்கள் – செய்திக்குறிப்பின் மூலம் தமிழர் தேசத்துக்கு பல செய்திகளை சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளன. இராணுவ நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரல் தமிழர் தேசத்தில் ஆழ வேரூன்றுவதன் – வேரூன்றியுள்ளமையின் வெளிப்பாட்டை அந்த ஒளிப்படங்கள் பிரதிபலிக்கத் தவறவில்லை.

காய்த்துக் குலுங்கும் மிளகாய்களை பறித்தல் – பறித்தல் – அவற்றை சேகரித்தல் – வெயிலில் உலர்த்துதல் என அனைத்துப் பணிகளும் தமிழ் இளைஞர் – யுவதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அந்தப் பணியில் ஈடுபடுபட்டவர்கள் இராணுவத்தை பிரதிபலிக்கும் உடைகளை தமது வழக்கமான உடைகளின் மேலாக போட்டிருந்தனர். இவர்கள் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவை (CSD)சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா ஊதியமாக வழங்கப்படுகின்றது. தவிர கடனுதவி உள்ளிட்ட சலுகைகளும் உள்ளன. இவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டாலும், இவர்கள் இராணுவத்தின் உதவியாளர்களாகவே உள்ளனர். இவர்களின் பணி இராணுவ பண்ணைகளை பராமரித்தலே. இந்த சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில், முன்னாள் போராளிகளும் அந்தப் பகுதிகளை சேர்ந்த மிக வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்களும் உள்ளனர்.

இவர்கள் சிவில் பாதுகாப்பு பிரிவில் சேர்வதற்கு வேலை வாய்ப்பின்மை, சமூக ஒதுக்கல்கள், வறுமை, விவசாயம் செய்வதற்கோ அல்லது வசிப்பதற்கோ உரிமையான நிலம் இவர்கள் வசம் இல்லாமை என இந்தப் பட்டியல் நீளமானது. வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் அல்லது பலாலி இராணுவப் பெருந்தளத்தின் இப்பண்ணைகளில் கூலிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களில் பெரும்பங்கினர் அநேகமானவர்கள் இந்த மண்ணின் சொந்தக்காரர்களே.

வலி. வடக்கு பிரதேசம்

08 3

வலி. வடக்கு, யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பிரதேசம் மட்டுமல்ல செல்வச் செழிப்புமிக்க பகுதியாகவும் இருந்தது. காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவை அமையப்பெற்ற இந்தப் பகுதிதான் ஒருகாலத்தில் இலங்கையிலேயே அதிக வருமானம் ஈட்டிய பகுதியாகவும் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்தியில் பெரும் பங்கை இந்த மண்ணே வழங்கியிருந்தது. அதிலும், மிளகாய் உற்பத்திக்கு இந்த மண் தனித்துவம் பெற்ற பகுதியாகவும் விளங்கியிருந்தது. 1972இல் ஆட்சிக்கு வந்த அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மூடிய பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியபோது வலி. வடக்கு பிரதேசம் செல்வம்கொழிக்கும் பூமியாகவே மாறியது. இதன் செல்வக் கொழிப்புக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவ முகாம்களாக இருக்கும் வீடுகளும் – உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து முன்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் – உடைவுற்று – சிதிலமுற்று எஞ்சி நிற்கும் வீடுகளே இவற்றுக்கு சாட்சி.

யாழ்ப்பாணத்தின் செல்வவளம் மிக்க இந்தப் பகுதி கடந்த சுமார் 30 ஆண்டுகளாக அந்நியப் பிடிக்குள் – இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு ஆயுத வழியில் இளைஞர்கள் பதில்கூற முற்பட்டபோது, தமிழர் தாயகம் முழுவதும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் நிகழ ஆரம்பித்தன. பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என குறுகிய முகாம்களில் இருந்த படையினர் பல்கிப் பெருகத் தொடங்கினர். இதன் விளைவால் முகாம்களும் தமிழர் நிலங்களை மெல்மெல்ல விழுங்க ஆரம்பித்தன.

06 1

1990ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானபோது, சிறு முகாம்கள் விசாலம் பெற்றன. தமிழர் நிலங்களை விழுங்கியவாறு சிங்களப் படைகள் அந்த நிலத்தின் மக்களை சொந்த இடங்களிலிருந்து துரத்தியடித்தனர். இதனால், அந்த மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர் – இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வசதி படைத்த சிலர் யாழ்ப்பாணத்தின் – நாட்டின் பிறபகுதிகளில் குடியேறினர். ஆனால், கணிசமானோர் அகதி முகாம்களிலேயே தஞ்சம் புகுந்தனர். போர் முடிந்து 12 ஆண்டுகள் முழுமையாக நிறைவுற்ற போதிலும் இவர்களின் அகதி வாழ்வு இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதே உண்மை நிலை.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயம்!

யாழ். மாவட்டத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர், மக்கள் மீள் குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விவசாய வளம் நிறைந்த பகுதியான வலி. வடக்கு பிரதேசம் சுமார் 16ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் ஆக்கிரமித்து நின்றது. இப்பகுதி மக்கள் 31 நலன்புரி முகாம்களில் தங்கள் வாழ்வை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

மனித உரிமைகள் மீறல்களை சற்றும் பொருட்படுத்தாமல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நடத்திய இறுதிப் போரின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் சற்று சுருங்க ஆரம்பித்தது. இது ஒன்றும் இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இரக்கத்தால் ஏற்பட்டதல்ல. தமிழ் அரசியல் கட்சிகள் நடத்திய சட்டப் போராட்டத்தாலும் – இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த மக்கள் நடத்திய தொடர்ச்சியான அறப் போராட்டங்களினாலுமே சாத்தியமாயிற்று.

05 2

எது எப்படி இருப்பினும், இன்று 3ஆயிரத்து 457 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருக்கிறது. இவற்றில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் போக பெரும்பங்கின விவசாய பூமிகளே. இதிலும் பெரும்பகுதி நிலங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் நிலங்களாகும். இந்த நிலங்களை விடுவிக்கும் மனநிலையில் இராணுவம் இல்லை. விடுவிக்கப்படுவதற்காக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவை இன்று வரை விடுவிக்கப்படவில்லை என்பதே இதற்கு ஆதாரம்.

ஆக்கிரமிப்பாளர்களின் தந்திரம்

வலி. வடக்கு மக்கள் தொடர்ச்சியாக அறவழி போராட்டங்களை நடத்துவது – சர்வதேச பிரதி நிதிகளிடம் மகஜர்களை கையளிப்பது என்று தொடர்ந்ததால் இந்தத் தொல்லைகளை அகற்ற சில குடியிருப்புகளை அமைத்தது. நிலமற்றோருக்கு காணி என்ற அடிப்படையில் – அதாவது வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 30 வருட காலப் பகுதியில் புதிய குடும்பங்களை – முன்னைய தலைமுறைகளை சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் காணியற்றவர்களாக உருவாகினர். அவர்களில் ஒரு பகுதிக்கு என நல்லிணக்கபுரம் என்ற பெயரில் குடியிருப்பு திட்டம் ஒன்றை அரசாங்கம் அமைத்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு என்ற பெயரில் 2017 -18 காலப் பகுதியில் உருவாக்கியது.

10 2

தன்னிறைவு காண ஒரே வழி!

சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்து – இராணுவத்தின் பண்ணைகளை பராமரிப்பவர்களுக்கு மாதாந்த ஊதியம் – கடன் சலுகைகள் என்பவற்றை வழங்கினர். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இவர்கள் மூலம் நிலத்துகான மக்களின் போராட்டத்துக்கு எதிர் போராட்டம் செய்விக்கவும் – இராணுவ ஆதரவு மனநிலையை உருவாக்கவும் இந்த சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இது அந்த நிலமற்ற மக்களை ஏமாற்றும் – அவர்களை எதிர்க்கவிடாது – போராட விடாது செய்யும் நுட்பமும் தந்திரமும் ஆகும். நிலம் இப்போதைக்கு விடுவிக்கப்படாது என்ற சூழ்நிலையில் கிடைக்கும் ஊதியத்தை இழப்பதற்கு இவர்கள் தயாராகவும் இல்லை. இதனால், ஆக்கிரமித்துள்ள நிலங்களில் சொந்த நிலத்தின் மக்களை கூலிகளாக்கி சொகுசு பங்களாக்களில் சுகபோக வாழ்வை இராணுவத்தினர் வாழ்கின்றனர்.

09

இந்த நிலையில், விவசாயப் புரட்சி ஏற்படுத்த கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் இப்போது முயல்கிறது. யாழ். படைகளின் தலைமையகம் விடுத்த செய்திக் குறிப்பின்படி விவசாயத்தில் தன்னிறைவு அடைவதற்கான வழி இராணுவம் நடத்தும் – நடத்தப்படும் பண்ணைகளல்ல. விவசாயம் மக்கள் மயப்படுத்துவதே அதற்கான வழி. வலி. வடக்கில் மட்டுமல்ல தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் விவசாய பூமியையும் – கடல் வளத்தில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை படைகள், அவற்றை தாய்நிலத்தின் மைந்தர்களிடமே மீளவும் வழங்குவதே.

தமிழ்க்குரலுக்காக -குமரன்