மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன்!

1608348483 sri 2
1608348483 sri 2

இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்றது. 

வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கையை, கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , அவ் அறிக்கையின் பிரதிகளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தனித்தனியே அனுப்பிவைத்துள்ளார். 

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது, தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது, காவற்துறையில் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இதுவிடயமாக  தமது நிறுவனம் சார்ந்து மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர், நீதிபதி ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்