ஆடைத்தொழிற்சாலைகளை திறந்து கிளிநொச்சியை அழிப்பதுதான் நோக்கமா?

mmm
mmm

கொரோனா தொற்று உலகை உலுப்பிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் பொதுமுடக்கமே வழியென உலகமே வெளித்துக் கிடக்கிறது. மூடப்பட்ட நகரங்களும் வெறிச்சோடிய வீதிகளுமாக இப் பேரிடர் உலகை ஒருமுகப்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறையினரின் இடையறாத போராட்டமும் அரசுகளின் பிரயத்தனங்களும் மனிதப் பலிகளை நிறுத்திவிட வேண்டும், உயிர்களை காத்துவிட வேண்டும் என்கிற பெருந் தவிப்பில் இருக்கிறது. மனிதர்கள் தம்மை தனிமைப்படுத்துவே ஒற்றை வழியென தீர்வாகிவிட்ட போதும் இந்த நோய்மைக் காலத்திலும் மனித உயிர்களை வைத்து விளையாடுகின்ற வியாபாரமும் அரசியலும், முகம் கோண வைக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். இங்குள்ள மனிதர்கள் போரின் இழப்புக்களிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள். போரின் பாதிப்பு மாத்திரமல்ல, பல்வேறு தாக்கங்களும் மக்களின் வாழ்வையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. கிளிநொச்சி சந்தை வியாபாரிகளை எடுத்துக் கொண்டால், கடந்த சில ஆண்டுகளின் முன்னர் அவர்களின் கடைகள் எரிந்து பெரும் பொருளாதார இழப்புக்கு முகம் கொடுத்தார்கள். இன்றைய பயணத்தடைக்காலம் அவர்களை, அவர்களின் குடும்பங்களை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா வேகமாக பரவுவதற்கு ஆடைத்தொழிற்சாலைகள் இன்னும் மூடப்படாமல் இருப்பதுவே பிரதான காரணமாக இருக்கின்றது. நாடே முடங்கியுள்ள நிலையிலும் கிளிநொச்சி  ஆடைத்தொழிற்சாலைகள் மாத்திரம் மூடப்படாத நிலையில் இருப்பது பெரும் அதிசயமாகவும் ஆபத்தாகவும் இருக்கிறது? அங்கு பணியாற்றும் பெருமளவான இளைஞர்களும் யுவதிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களால் அவர்களின் வீடுகளில் உள்ள குடும்பத்தினருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியின் அத்தனை கிராமங்களில் இருந்தும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு இளைஞர் யுவதிகள் செல்லுகின்றனர்.

இதனால்தான் தற்போது கிளிநொச்சியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் கொரோனா தொற்று அபாயம் மிகவும் குறைந்த மாவட்டமாக காணப்பட்ட கிளிநொச்சி, தற்போது தொற்றுக்கும் கொரோனா மரணங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. இதற்கு வழிகோலிய மூல காரணியாக ஆடைத்தொழிற்சாலை திறப்பே காணப்படுகின்றது. நாட்டின் அனைத்து பொருளாதார செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதனை மாத்திரம் முடக்க தயங்குவது ஏன்? இதில் மிக்க பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியான மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மௌனம் காட்டுவது ஏன்? கிளிநொச்சியை அழிப்பதுதான் மாவட்ட அரசாங்க அதிபரின் நோக்கமா?

அத்துடன் கடந்த காலத்தில் எந்த விடயத்தை எடுத்தாலும் மூக்கை நுழைத்து கருத்தை சொல்லி, தலையீடு செய்கின்றவரும், கிளிநொச்சி மாவட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனும் இந்த விடயத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றார்? ஆடைத்தொழிற்சாலை திறப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தற்போது அங்கே பணியாற்றும் தொழிலாளர்கள் உயிராபத்தை சந்தித்துள்ளமை குறித்து மாத்திரம் ஏன் பேசவில்லை?

ஆடைத்தொழிற்சாலையின் முதலாளி மட்டத்தினர் கொழும்புக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால்தான் இந்த பயணத்தடை காலத்திலும் அவை திறக்கப்படுவதாக அங்கு பணியாற்றும் இளைஞர்களும் யுவதிகள் தமது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் சகல நிறுவனங்களும் செயற்படாத நிலையில் தமது உயிருடன் மாத்திரம் விளையாடுவதாகவும் அவர்கள் கவலை கொள்ளுகின்றனர். இந்தப் பேரிடர் காலத்திலும் அப்பாவித் தொழிலாளர்களை வைத்து பணம் சம்பாதிப்பதுவே இதனை நடத்துவர்கள் மற்றும் தற்போது இதனை திறக்க அனுமதிப்பவர்களின் நோக்கமாக உள்ளது. ஆனால் அதுவே கிளிநொச்சியில் பெரும் மனித அழிவுக்கு வழி சமைக்கும் அல்லவா?

சிறிய பெட்டிக்கடைகளையும் மூடி, மருந்துக்காக பாமசிகளுக்கு செல்பவர்களையும் திருப்பி அனுப்புகின்ற இராணுவம் மற்றும் காவல்துறையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இந்த விடயத்தில் மாத்திரம் ஏன் நடவடிக்கை எடுக்காது அமைதியாக உள்ளனர்? அத்துடன் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைபற்றி பேசமாட்டாரா? அவரிடமும் இதற்கான முக்கிய பொறுப்பு இருக்கிறதல்லவா?

இலங்கையில் கலால் வருமானத்துறை போன்று தைத்த ஆடைகளின் ஏற்றுமதியே அரசுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது. அதனால் நாட்டுக்கு பெரும் அந்நியல்செலாவணி கிடைக்கிறது. இவ்வாறு உழைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்ற தொழிலாளர்களை கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாத்து, அவர்களை பாதுகாப்பாக வீட்டில் இருக்கச் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் அல்லவா? அதுவே அவர்களின் உரிமைக்கும் உழைப்புக்கும் அளிக்கின்ற மரியாதையாக இருக்கும். அதனைவிடுத்து, தொற்று இணங்காணப்பட்ட கிராமங்கள் நிறுவனங்கள் முடக்கப்படுகின்ற நிலையில் 60இற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகியும் இன்னமும் ஆடைத்தொழிற்சாலைகளை முடாமல் இருப்பதை ஏற்க முடியாது.

இந்த விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். கிளிநொச்சியை தளமாக கொண்ட ஊடகம் என்ற வகையில் இதனை தட்டிக் கேட்கும் பொறுப்பையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமையையும் தமிழ்க்குரல் கொண்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் கலைத்து, அரசு மற்றும் வணிக முதலாளிகள்மீதான விசுவாசத்தை விடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அதன் வாயிலாக கிளிநொச்சி சந்திக்ககக்கூடிய மிகப் பெரிய மனித உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதையும் தமிழ்க்குரல் வலியுறுத்தி நிற்கிறது.

தமிழ்க்குரல்ஆசிரியர் பீடம்