வடக்கு – தெற்கு முரண்பாடு தீர்க்கப்பட்டு விட்டது! மன்னாரில் பிரதமர் மஹிந்த

Mannar Windplant Opening PMO Tamil News 06
Mannar Windplant Opening PMO Tamil News 06

வடக்கு – தெற்கு இடையேயான முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளது. அனைத்து இனத்தவர்களும் சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்தியதாலேயே மக்கள் பலமான ஆட்சி அதிகாரத்தை எமக்கு மீண்டும் வழங்கினார்கள்.

மன்னாரில் அமைக்கப்பட்ட முதலாவது பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று செவ்வாய்கிழமை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் மின்வலுத்துறை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எமது ஆட்சி காலத்தில் தேசிய மின்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. உமா ஓயா, மேல் கொத்மலை, மொரகஹாகந்த நீர்மின்நிலையம் என்பன ஸ்தாபிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகையில் மின்பயன்பாடு 65 வீதமாக காணப்பட்டது. இந்நிலைமை 2015 ஆம் ஆண்டுக்குள் 98 விதமாக மாற்றியமைக்கப்பட்டது. பல காலமாக இழுபறி நிலையில் இருந்த நுரைச்சோலை அனல் மின்நிலைய நிர்மாணிப்பு முழுமைப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மின்வலுத்துறையில் சிறந்த திட்டங்கள்  செயற்படுத்தப்படவில்லை. அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இதன் தாக்கத்தை மக்கள் எதிர்கொண்டார்கள். கெரவலபிட்டிய மற்றும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாக மேலதிகமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் புதுப்பிக்கத்தக்க மின்வளங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அவை இன்று பல வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்துக்கு அமைய 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்கட்டமைப்பில் 80 வீதம் மின்உற்பத்தி இணைக்கப்படும்.

இந்நாட்டின் தலைவர் மன்னார் மடுமாதா தேவாலயத்துக்குச் செல்ல வேண்டுமானால் விடுதலை புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறிய நிலைமையை தற்போது மாற்றியமைத்துள்ளோம். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடு தற்போது  தீர்க்கப்பட்டுள்ளது. அனைத்து இனத்தவர்களும் சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளதால் நாட்டு மக்கள் பலமான ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்கியுள்ளார்கள்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சுபீட்சமான கொள்கை திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும் என்றார்.

மன்னார் 30 கிலோமீற்றரில் 150 ஹெக்டயர் நிலப்பரப்பில் முதலாவது பாரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மின்னுற்பத்தி ஊடாக 103.5 மெகாவாட் மின் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கத்தாகும்.