சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

IMG20210224132032 01
IMG20210224132032 01

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.

இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட பந்தலுக்கு முன்பாகவே இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நானகு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.

எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்.

இவ் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு பிள்ளைகளின் படங்களையும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளினுடைய கொடிகளையும் தாங்கியவாறு கண்ணீர் மல்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.