இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து; உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்களும் இணைவு!

amparai
amparai

‘சர்வதேசமே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து!!’ என்று வலியுறுத்தி அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்தப் போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நீதிக்கான பேரணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவருமான தாமோதரம் பிரதீபன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரட்ணம், பொன் செல்வநாயகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் தலைவர் துஷானந்தன், ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவி கந்தையா கலைவாணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் முஸ்லிம் மக்களும் இன்று இணைந்துகொண்டனர்.

“சுழற்சி முறையிலான இந்தப் போராட்டத்தை பல்வேறு தடைகளை உடைத்து முன்னெடுத்து வருகின்றோம். அரசு பல தவறுகளைச் செய்துள்ளது. அதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரியே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணையைக் கோரி லண்டனில் வசித்து வரும் பெண் அம்பிகை செல்வகுமார் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 13 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அவருக்கு ஆதரவு வழங்கியும் சுழற்சி முறையிலான எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்” – என்று அம்பாறை உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.