தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு இன்று

land 1 720x375 1
land 1 720x375 1

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும், இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை மெய்நிகர் (Zoom) வழியில் இடம்பெறும்.

இந்த மாநாட்டில் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவிருப்பதால் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து பயன்பெறுமாறு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் சிறப்பு விருந்தினராக இந்த மாநாட்டில் கலந்துகொண்டு நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் ஐ. நா மனித உரிமைகள் சபை முன்னாள் உயர்ஸ்தானிகரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதியரசருமான திருமதி நவநீதம்பிள்ளை, பிரிட்டனின் சர்வதேச மனித உரிமைகள் வழக்குரைஞரும் பிரிட்டனின் முன்னாள் பிரதமருமான ரொனி பிளேயரின் பாரியருமான செரி பிளேயர் மற்றும் கனடாவின் சிறப்பு மிக்கோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவரும் 2010 ஆம் ஆண்டு மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக நோபல் பரிசுக்கு முன்மொழியப்பட்டவருமான சர்வதேச மனித உரிமைகள் வழக்குரைஞர் டேவிட் மாடஸ் ஆகியோரும் முதன்மை உரை ஆற்றுகின்றார்கள்.

நான்கு அமர்வுகளாக இடம்பெறும் இந்த மாநாட்டில், முதலாவது அமர்வு ‘வடக்கு – கிழக்கில் தமிழர் நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுதல்’ என்ற தலைப்பில் நடைபெறும்.

இந்த அமர்வில் வடக்கு – கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு தொடர்பில் ‘முடிவற்ற போர்’ என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க சிந்தனை மையமான ஒக்லாண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால், ஒபாமா நிர்வாக வெள்ளை மாளிகை உத்தியோகத்தரும் தற்போது வட கரோலினா மாநிலத்தின் செனட்டருமான வெய்லி நிக்கல், மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் பவானி பொன்சேகா, முன்னாள் மாகாண காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இரண்டாவது அமர்வு ‘நில அபகரிப்பு தொடர்பிலான சட்ட மற்றும் அரசியல் சவால்கள் மற்றும் பரிகாரங்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த அமர்வில் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, முன்னணி சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில் தவத்திரு வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மூன்றாவது அமர்வு ‘நிலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கைகள்’ என்ற தலைப்பில் நடைபெறும். இந்த அமர்வில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியரும் ‘வெளிநாட்டு முதலீடு தொடர்பான சட்டம்’ என்ற பிரபல்யம்மிக்க நூலை எழுதியவருமான கலாநிதி எம். சொர்ணராஜா, யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை முன்னாள் பேராசிரியர் வி.நித்தியானந்தம், பிரிட்டன் நோட்டிங்காம் பல்கலைக்கழக சர்வதேச மனித உரிமைகள் பேராசிரியர் கலாநிதி தமிழ் ஆனந்தவிநாயகன், சட்டத்தரணி வெரோனிகா பாவ்லோஸ்காயா, மனித உரிமைகள் ஆலோசகர் லொரான்ஸோ பியோரிட்டோ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

புலம்பெயர் தமிழ் இளையோர்கள் கலந்துகொள்ளும் அமர்வு ஒன்று இறுதியாக நடைபெறும்.