வடக்கு, கிழக்கில் ஐ.நா. ஆணையாளரின் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்! ஜெனிவாவில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து!

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்.என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரான்ஸில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணையவழி ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் சிங்கள அரசு 72 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம், இலங்கை மீது பல்வேறு ஐ.நா. பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எதையும் இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.