அரசினுள் உள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது – சஜித்

பிரேமதாச

மே தினக் கொண்டாட்டங்களைக் கொரோனாவைக் காரணம் காட்டி தடை செய்தமை ஊடாக அரசினுள் உள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதும் முக்கிய பங்காளிகள் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தனர். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுநாள் மே தின நிகழ்வுகளை தனித்து நடத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்தது.

அரசின் ஏனைய பங்காளிகள் அரசுடன் கைகோர்க்காமல் மே தின நிகழ்வுகளைத் தனித் தனியே நடத்த ஆலோசித்து வந்த நிலையில் மே தினம் அன்று எந்த நிகழ்வுகளையும் பேரணிகளையும் நடத்த வேண்டாம் என்று கொரோனாத் தடுப்புச் செயலணியும் கேட்டுக் கொண்டுள்ளது.

பங்காளிகளுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடலின் பின்னர் அரசு பிளவடையும் என்று நான் பகிரங்கமாகச் சொல்லியிருந்தேன். அதை மூடி மறைக்கும் விதத்தில் மே தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே தின நிகழ்வுகளின் தடைக்கு உண்மையில் கொரோனாதான் காரணம் எனில் ஜனாதிபதி தலைமையிலும் பிரதமர் தலைமையிலும் அமைச்சர்கள் தலைமையிலும் நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளுக்குக் கொரோனாத் தடுப்புச் சட்டம் விதிவிலக்கில்லையா?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.