மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன்

download 1 30
download 1 30

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(28) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறுகின்ற போதிலும் , அதனை எந்த முறைமையில் நடத்துவது என்பது அரசாங்கத்திற்கு பெறும் பிரச்சினையாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதியை நிறைவேற்றும் வகையிலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மாகாணசபை விவகாரத்தில் தீர்க்கமானதொரு முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் உண்மையில் தேர்தல் நடத்தப்படுமா? என்று உறுதியாகக் கூற முடியாது.

மாகாணசபைத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா பல சந்தர்ப்பங்களில் அழுத்தம் பிரயோகித்துள்ளது. ஆனால் கொவிட் நிலைமையைக் காரணம் காட்டி எதையுமே செய்ய முடியாது என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் , கொவிட் , எண்ணெய் இறக்குமதி , உரம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அரசாங்கத்தின் வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது. எத்தகைய சிக்கல் காணப்பட்டாலும் இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.