வடக்கில் இந்தியாவின் திரிபு வைரஸ் இல்லை ; ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

pcrtest 1024x576 2
pcrtest 1024x576 2

“வடக்கு மாகாணத்தில் இந்தியாவிலிருந்து வந்த தொற்றாளர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டபோதும் இதுவரை, இந்தியாவின் திரிபு வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆனால், இலங்கையில் காணப்படும் பல்வேறு திரிபு வைரஸ் வடக்கில் கண்டறியப்பட்டுள்ளது.” என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் வாயு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கில் அடையாளம் காணப்பட்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பலரின் மாதிரிகள் எம்மால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது டென்மார்க், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் வைரஸ் சிலருக்கு இனங்காணப்பட்டது. யாழ். மாவட்டம், நல்லூர் பிரதேசத்திலேயே மேற்படி வைரஸ் பரவல் இனங்காணப்பட்டது. அதேவேளை, பிரிட்டனில் பரவும் வைரஸ் மன்னார் நகரப் பகுதியில் சிலருக்கு இனங்காணப்பட்டது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றுடன் வடக்கில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை.

வடக்கில் நாள்தோறும் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் இலங்கையில் திரிபடைந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” – என்றார்.