அரசாங்கம் உரிய பாடங்களை இதுவரை கற்றுக் கொள்ளவில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

RANJITH MADDUMA BANDARA

அரசாங்கம் உரிய பாடங்களை இதுவரை கற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து பிரதான் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயணத்தடை காரணமாக நாளாந்த வருமானம் பெறும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாளாந்த கூலித்தொழில் செய்பவர்கள், நாளாந்தம் சுயதொழில் புரிபவர்கள், தனியார் துறையில் தொழில் புரிபவர்களில் தற்காலிகமாக தொழில் இழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப அங்கத்தவர்களும் தமது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர். பயணத்தடை காரணமாக தமது உறவினர்கள் நண்பர்களின் உதவிகளையும் கூட பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். புலமைத்துவ அரசாங்கம் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் புலமைத்துவமற்ற அரசாங்கம் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. சுகாதாரத் துறையினரை ஒன்றுகூட்டுவதாகக் கூறிய அரசாங்கம் மூட நம்பிக்கையாளர்களை ஒன்றுகூட்டியது.ஆளுந்தரப்பு அரசாங்கத்தின் அமைச்சர்கள் தம்மிடம் போதியளவு நிதி இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.

அதனைக்கொண்டு அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். அரசாங்கம் உரிய பாடங்களை இதுவரை கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகின்றது.

பயணத்தடை தொடரும் வரை இந்தத் தேவையுடையவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.