கொரோனா நிவாரணப் பணிக்கு நிதி உதவி செய்யுமாறு க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

cm
cm

தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச்சீட்டும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

எனது அன்பிற்குரிய மக்களே!

கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக தொடரும் பயணத் தடைகள் மற்றும் முடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உண்ண உணவின்றி பெருந் துன்பங்களை அனுபவித்துவருகின்றனர். குறிப்பாக, அரசாங்க வேலைகளோ அல்லது தனியார் நிறுவன வேலைகளோ இல்லாமல் தினமும் கூலி வேலை செய்து வாழ்ந்துவந்த குடும்பங்கள் எந்தவிதமான வருமானமும் இன்றி அனுபவித்துவரும் துன்பங்கள் பற்றிய ஏராளமான செய்திகள் நாளாந்தம் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை நீங்கள் அறிவீர்கள்.

எம்மால் முடிந்தளவுக்கு வெளிநாடுகளில் இருக்கும் ஆதரவாளர்கள், தெரிந்தவர்களின் உதவிகளுடன் சில உதவிகளை நாம் செய்துவருகின்றோம். அதேபோல, ஏனைய கட்சிகளும் தம்மால் முடிந்தளவுக்கு மக்களுக்கு உதவிகளைச் செய்துவருகின்றார்கள். ஆனால், இந்த உதவிகள் எல்லாமே “யானைப்பசிக்கு சோளப்பொரி” போலவே இருக்கின்றன. எம்மால் முடிந்தளவுக்கு எமது சக உறவுகளின் பசியைப் போக்கி இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யவேண்டிய பெரும் பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின்றது.

“நம்பிக்கைப் பொறுப்பு” என்ற எமது பதிவு செய்யப்பட்ட நன்கொடை அமைப்பின் ஊடாக இவ்வாறு அல்லலுறும் மக்களுக்கு எம்மால் முடிந்தளவுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

“நம்பிக்கைப் பொறுப்பு” என்பது முற்றிலும் ஒரு நன்கொடை அமைப்பு. இதன் ஊடாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ஏற்கனவே நாம் நிவாரணம் வழங்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றோம். தயவுசெய்து உங்களால் முடிந்தளவு நிதி உதவியினை நாம் முன்னெடுக்கும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வழங்கி உதவுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் வழங்கும் உதவிகள் முழுமையாக கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதி வழங்குவதுடன் நீங்கள் அனுப்பும் பணம் மற்றும் செலவழித்த தொகை ஆகியவற்றுக்கான கணக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும். அத்துடன், நீங்கள் வழங்கும் நிதி உதவிக்கான பற்றுச்சீட்டும் தனித்தனியாக உங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்படும். அண்மையில் நடந்த தேர்தல் வரவு செலவுகளை வெளிப்படையாக நாங்கள் நடத்தி பத்திரிகைகளில் உரிய விபரங்களை வெளியிட்டிருந்தோம்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்குக்கு உங்கள் நிதி உதவிகளை வழங்கலாம். அவ்வாறு நிதி உதவி வழங்குபவர்கள் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பிய பின்னர் உங்கள் பெயர் விபரம், அனுப்பிய தொகை, அனுப்பிய திகதி ஆகியவற்றை cvwofficenallur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். நிதி உதவி செய்பவர்களின் பெயர் விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படாது. மேலதிக தகவல்களுக்கு மேலே தரப்பட்ட மின்னஞ்சலின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.