அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது – சிறிதரன்

IMG 20210615 170508
IMG 20210615 170508

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் இன்று நாட்டில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ரணில் மைத்திரி அரசு இருந்த போது குறிப்பிட்ட ஆறு, ஏழு ரூபா விலைச் சூத்திரத்தில் விலையேற்றம் இடம்பெற்றதைக் காரணம் காட்டி நாட்டின் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஆனால் இன்று அவர்களால் ஒரு லீட்டர் பெற்றோல் 20 ரூபா, டீசல் 12 ரூபா, மண்ணெண்ணெய் 7 ரூபா வரையும் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

உலகத்திலே, ஆசியாவிலே ஏனைய நாடுகளை விட இங்குதான் பெற்றோல் விலை குறைவென்று அவர்கள் சொன்னாலும் அந்த நாடுகளில் இருக்கின்ற அரிசி, மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் அவற்றின் விலை அதிகமாக இருக்கின்றது. இங்கு எரிபொருளின் விலையேற்றம் என்பது தனியே எரிபொருளுக்கு மாத்திரமல்ல எரிபொருளைப் பயன்படுத்துகின்ற போக்குவரத்தில் இருந்து உணவுத் தயாரிப்பு என விலை அதிகரிப்பு இடம்பெறும். தற்போது எரிவாயுவுக்கான விலையும் அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றது.

சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று சிங்கள மக்கள் வெறுப்படைந்து போயிருக்கின்றார்கள். தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என்று அவர்கள் நினைக்கும் அளவிற்கு இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுடைய மனநிலைகளைப் புரிய வைத்திருக்கின்றது.

இன்று இந்த நாட்டின் தலைவரின் தலைமையிலான இந்த அரசு பெற்றோல் விலையேற்றத்தினூடாக எல்லா மக்களுடைய அடிப்படை வாழ்வை ஆட்டங்காண வைத்திருக்கினறது. அதிலும் இந்தக் கொரோனா நோய் பரவியிருக்கின்ற சூழலில் வாழ்வாதாரத்திற்காக ஏங்குகின்ற, அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையெல்லாம் கேள்விக் குறியாக இருக்கின்ற போது எரிபொருள் விலையேற்றம் இன்னும் இன்னும் அவர்களைப் படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது என்று தெரிவித்தார்.