போரை ஒழிக்க ஒன்றிணைந்தது போல வைரஸை அழிப்போம் – நிமல் லன்சா

unnamed 2 scaled 1
unnamed 2 scaled 1

நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. அதனையடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவலால் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே யுத்த காலத்தில் நமக்காக நாம் ஒன்றிணைந்ததைப் போன்று பொருளாதாரத்தை மேம்படுத்த, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

22 மில்லியன் மக்களதும் நாட்டினதும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களுக்கமைய நாட்டை முடக்காதிருக்க வேண்டும். 

இதன் ஊடாக சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனில் நாட்டை முடக்கி வைத்திருக்க முடியாது. 

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாட்டை முடக்காமல் நடத்திச் செல்ல வேண்டும். 22 மில்லியன் மக்களதும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் சுற்றுலாப்பயணிகள் வருகை தர வேண்டும் என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  

22 மில்லியன் மக்களது பொருளாதாரம் முதலீடுகள் மூலமே வலுப்படுத்தப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.

நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவல். எனினும் அது எமக்கு பிரச்சினையல்ல. 

யுத்த காலத்தில் நமக்காக நாம் ஒன்றிணைந்ததைப் போன்று பொருளாதாரத்தை மேம்படுத்த , ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். 

உலகிலுள்ள அனைவரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஒருநாளேனும் கால தாமதமடையக் கூடாது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். 

எனவே கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த காலங்களில் பல அபிவிருத்திகளை ஆரம்பித்தோம். நாம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்த போது கொவிட் பரவலுக்கு மத்தியில் இவை தேவையா? என்று சிலர் கேள்வியெழுப்பினர். 

எவ்வாறிருப்பினும் மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக நாம் அவற்றை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றோம். 

2005 – 2014 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 7 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. 

எனினும் 2015 – 2019 நல்லாட்சி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இந்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் வீழ்ச்சியடைந்தது. 

இவ்வாறான நிலையில் தற்போது விருப்பமில்லாவிட்டாலும் கொவிட் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீண்டும் மீண்டும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது.  

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கமைய நாட்டை முடக்காமல் இருக்க வேண்டும். நாட்டை முடக்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் அனுமதித்துள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆனால் சுற்றுலாத்துறை இயங்காமல், முதலீடுகள் இடம்பெறாமல், அபிவிருத்திகளை முன்னெடுக்காமல் நாட்டை முடக்கி வைத்திருந்தால் ரூபாவினை எம்மால் பாதுகாக்க முடியாது. 

ரூபாவை பாதுகாத்தோமானால் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டு மக்களுக்காக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். 

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்போது நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கிறது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.