ரிஷாத் வழக்கு: ஹக்கீம் காட்டம்

image 8f74232e6a
image 8f74232e6a

நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் தொடர்பான வழக்கில் நீதியரசர்கள் விலகி வருவது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

இங்கு நீதி அமைச்சர் இந்த மசோதா சம்பந்தமாக நீண்ட விளக்கமொன்றை அளித்தார். இப்பொழுது ஒரு விடயம் தொடர்பில் புதியதொரு யூகம் ஏற்பட்டிருக்கின்றது.

நாங்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு எப்பொழுதுமே மதிப்பளித்து வருகின்றோம். வழக்கிலிருந்து விலகிக்கொள்வதற்கு அவர்கள் காரணங்களைக் கூறக்கூடும். ஆனால், இப்பொழுது நீதியரசர்கள் நால்வர் வரிசையாக வழக்கிலிருந்து விலகியுள்ளனர். இதில் தலையீடுகள் எவையும் இருந்திருக்க முடியாது.

இது பற்றி ஒரு நிலையான நெறிமுறை இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பிரதம நீதியரசரும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது நீதியரசர் குழாத்தை நியமிக்கும்போது குறைந்த பட்சம் அது பற்றி குறிப்பிடப்பட்டு, அவ்வாறு வழமையாக இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முன்னர் கூறியவாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பான வழக்கிலிருந்து இப்பொழுது நீதியரசர்கள் நால்வர் விலகி இருக்கின்றனர். அவர் தடுப்புக் காவலில் 73 நாட்களாக இருந்து வருகின்றார். இந்த மனித உரிமை வழக்கு இதே காரணத்தால் பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இந்த விதமாக நீதியரசர்கள்  ஒருவர் பின் ஒருவராக தொடர்ச்சியாக விலகிக்கொண்டே போனால், அதன் விளைவாக இறுதியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டதாக ஆகிவிடும்.

அவர் ஓர் சிரேஷ்ட அரசியல்வாதியாக இருப்பதனால் இந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து, ஒருவிதமான வித்தியாசமான தோற்றப்பாடு ஏற்படுக்கூடும். ஆகையால், பிரதம நீதியரசர், வழக்குக்கு நீதியரசர்களைத் தேர்ந்தெடுக்கும்போது இவ்வாறு நடந்து விடாதிருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும் – என்றார்.