காடைத்தனமான அடக்குமுறையின் விளைவுகளை அரசு சந்திக்கும்! – சம்பந்தன்

1C1461D5 8374 4AD3 8861 35EA4456378E 4460 00000621CC1C35DF
1C1461D5 8374 4AD3 8861 35EA4456378E 4460 00000621CC1C35DF

“வன்முறையில் இறங்காமல் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களைக் காவல்துறையினரைக் கொண்டு காடைத்தனமான முறையில் அடக்குவது அரசின் சர்வாதிகாரப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அரசின் இந்த அராஜகம் தொடர்ந்தால் பெரும் பின்விளைவுகளை அது விரைவில் சந்தித்தே தீரும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வன்முறையில் இறங்காமல் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் – குற்றங்கள், குறைகள், நியாயங்களைப் பகிரங்கமாக எடுத்தியம்பக்கூடிய வகையில் மக்கள் ஒன்றாகக்கூடி தங்களுடைய குரலை அரசுக்கு எதிராக எழுப்புவது மறுக்க முடியாத அடிப்படை உரிமை.

அந்த அடிப்படை உரிமை – ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அவ்விதமான உரிமை மறுக்கப்பட்டால் அது நாட்டினுடைய போக்கு நல்லதல்ல என்பதை எடுத்துக்காட்டும். அது சர்வாதிகாரத்தின் போக்கை வெளிச்சம் போட்டுக்காட்டும். இந்த அராஜகத்தைத்தான் இந்த அரசு செய்து வருகின்றது.

அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது ஜனநாயக நாடு எனில் மக்கள் சட்டத்துக்கு உட்பட்டு சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் உரிமை இருக்கின்றது. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்” – என்றார்