அரசின் கொத்தலாவல சட்டமூலத் திட்டம்; நாட்டில் இராணுவக் கெடுபிடி எவ்வாறுள்ளது என்பதை உணர்த்தியுள்ளது – ரவிகரன்

images 1 1
images 1 1

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை நிறைவேற்ற, கோத்தாபய தலைமையிலான அரசு மேற்கொண்ட திட்டத்தின் மூலம், இந்த நாட்டில் இராணுவக் கெடுபிடிகள் எவ்வாறு உள்ளது என்பதை தெற்கைச் சார்ந்தவர்கள் நன்கு அறிந்துள்ளனர். என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் என்பது, உயர் கல்வி அமைச்சு,கல்வி அமைச்சு,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,தொழில்முறை தர நிலைகள் நிறுவனம்,பல்கலைக்கழக செனட் சபை மற்றும் கட்டுப்பாட்டுச் சபை போன்ற நிறுவனங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் அனைத்தையும் ஒரே சபைக்கு வழங்குவதான ஒரு சட்டமூலம் என்று சொல்லப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக அந்த சபையின் பத்து உறுப்பினர்களில் ஐவர் இராணுவ அதிகாரிகள் என்பதுடன், இருவர் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர்கள், மிகுதி மூவரும் அரசியல் நியமனங்கள் எனவும் சொல்லப்படுகின்றது.

அதேவேளை தற்போது நடைமுறையிலிருக்கும் 1978 – பல்கலைக்கழக சட்டமூலம் இந்த சபைக்கு எவ்வித தாக்கத்தினையும் செலுத்தாது.

இந்த சபையானது பாதுகாப்பு அமைச்சருக்கு மாத்திரமே பொறுப்புக்கூறும்.
பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல பாடசாலைகள் அமைக்க ,அவைகளின் பாடத்திட்டங்களை தீர்மானிக்க பரீட்சைகள் நடாத்தவும் முழு அதிகாரம் இந்த சபைக்கு உண்டு. கல்வி அமைச்சுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த சபையினால் அனுமதிக்கப்படும் பட்டங்களுக்கு தர கட்டுப்பாட்டு நிறுவனங்களின் அங்கீகாரம் தேவை இல்லை. தமது பட்டங்கள் தரம் சிறந்தது என்று அந்த சபைக்கே தீர்மானிக்க முடியும்.

எந்தவொரு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் இந்த சபையின் அனுமதியை பெற்று கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டம் வழங்கும் அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே நடக்கும் எந்தவொரு எதிர்ப்பின் போதும் தமக்கு சரியானது என தீர்மானிக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்து அடக்கிட பாதுகாப்பு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது.

இவ்வாறாக இந்த சட்டமூலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலவச கல்வி, இலவச சுகாதாரம் என்பன இதனோடு முடிவுக்கு வந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் கல்வியை இராணுவமயமாக்கும் செயற்பாடு இடம்பெறும் எனவும் சொல்லப்படுகின்றது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பலரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை, பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையரடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதன்போது நாட்டின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதி எனவும் அவர் இங்கு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைசார்ந்த தீர்மானம் எது எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறானதொரு ஒருசட்டமூலத்தை ஏற்படுத்தி இந்த நாட்டில் நடைமுறையிலுள்ள இலவசக் கல்வியை இல்லாதொழிப்பதுதான் நாட்டின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைசார்ந்த தீர்மானமா?

அல்லது கல்வியை இராணுவ மயப்படுத்துவதுதான் இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானமா?

எனவே இவ்வாறானதொரு மோசமான சட்டமூலத்தை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறைக்கு பாரிய அநீதியைச் செய்ய முனைந்தது இந்த அரசாங்கமே தவிர, இந்த சட்டமூலத்தினை எதிர்த்துப் போராடியவர்கள் அல்ல.

குறிப்பாக இந்த சட்டமூலம் இராணுவத்தினருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதான செயற்பாடகவே பார்கவே முடிகின்றது.

இந்த கோட்டாபய அரசு இந்த நாட்டைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, இங்கு இராணுவ ஆட்சி ஆரம்பித்து விட்டது என்ற விடயத்தினை தமிழர் தரப்பான நாம் தொடர்சியாக பலதடவைகள் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

ஜனாதிபதி செயலணிகளில் இராணுவத் திணிப்பு, ஏனைய அரச திணைக்களில் செயற்பாடுகளில் இராணுவப் பிரசன்னம், நாட்டின் சுகாதார செயற்பாடுகளில் இராணுவத்தின் செல்வாக்கு என ஆரம்பித்து, தற்போது கல்வி விடயங்கள் வரையிலும் இராணுவத்திற்கு இந்த அரசு அதிகாரங்களை அள்ளிவழங்குகின்றது. இது மிகவும் ஆபத்தானதும், அபத்தமான செயற்பாடாகும்.

ஏற்கனவே தமிழர் தாயகப்பகுதிகளில், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, இராணுவ வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு இங்குள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு அச்சுறுததல்களுக்குள்ளாகி வருகின்றனர்.

வடகிழக்கிலிருந்த இந்த இராணுவ அடக்குமுறை தற்போது தெற்கை நோக்கியும் நகர ஆரம்பித்திருக்கின்றது.

பாதுகாப்புத் தரப்பின் அடக்கு முறைச் செயற்பாடுகளை தெற்கைச் சேர்ந்தவர்களும் தற்போது அறிய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக தற்போது இந்த சட்மூலத்திற்கு எதிராக போராடிய இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், பௌத்த துறவிகள், ஏனைய தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாப்புத்தரப்பால் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்த தெற்கைச் சார்ந்தோர் பல கேள்விகளை எழுப்புகின்றனர். குறிப்பாக இந்த ஜனநாயக நாட்டிலே ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுக்க முடியாதா? இந்த நாடு ஜனநாயக நாடுதானா? என பல்வேறு கேள்விகள் அவர்கள் மனங்களில் எழுந்துள்ள நிலையினை நாம் பார்கின்றோம்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்று விடுதலை செய்தாலும், பாதுகாப்புத் தரப்பினர் தனிமைப்படு்தல் என்னும் போர்வையில் அவர்களை தடுத்து வைத்திருந்தனர்.

தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்று அவர்களுக்கு தொற்றுக்கள் இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளிவந்திருந்தாலும் பல நாட்களாக அவர்கள் தனிமைப்படுத்தல் எனும் போர்வையில் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் 16.07.2021அன்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் இராணுவத்தின் சர்வாதிகாரப் போக்கினை நன்கு அறிந்துள்ளனர்.

இதனை விட இவ்வாறு தனிமைப்படுத்தல் எனும் போர்வையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு, உணவுப்பொருட்களை வழங்குவதற்கு தெற்கிலிருந்து கடந்த 15.07.2021 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில் ஒரு குழுவினர் கேப்பாப்புலவிற்கு வருகைதந்தனர்.

அவர்கள் வருகைதரும்போது ஓமந்தை இராணுவ வீதித்தடை தொடக்கம், கேப்பாபுலவு பிரதான வாயிலில் அமைந்துள்ள இராணுவ வீதித்தடை வரையில் அவர்கள் இராணுவத்தினரால் எதிர்நோக்கிய அசௌகரியங்களைப் பற்றி சொல்லியிருக்கின்றார்கள்.

குறிப்பாக ஓமந்தை, புளியங்குளம், நெடுங்கேணி, தண்டுவான், கழிக்காடு, மூன்றாங்கட்டைச் சந்தி, கேப்பாப்புலவு பிரதான வாயில்ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள  அனைத்து வீதித்தடைகளிலும் தாம் தடுக்கப்பட்டு இராணுவத்தினரால் தாம் விசாரிக்கப்பட்டதாகவும், இதனால் தமது பயணத்தில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் ஓரிரு வீதித்தடைகளில் தம்மோடு வருகைதந்தவர்களின் வாகனங்கள் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தாம் மாத்திரமே உணவு வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்டதாக ஆசிரியர்சங்கத்தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையிலான அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாம் சுதந்திர நாட்டிலேதான் வாழ்கின்றோமா? என அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். வடக்கை நோக்கிய வருகையின் மூலம்  இராணுவத்தின் கெடுபிடிகளை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இவ்வாறாக கொத்தலாவல சட்டமூலம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சட்ட மூலமாகும்.  இருப்பினும் அந்த சட்மூலம் இந்த நாட்டில் இராணுவத்தின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இருக்கின்றது என்பதை தெற்கில் இருக்கின்றவர்களுக்கும் நன்கு உணர்ந்தியிருக்கின்றது என்பதே இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாக இருக்கின்றது – என்றார்.