போலித் தேசியத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை போகாது – யோகேஸ்வரி பற்குணராஜா திட்டவட்டம்

jokesvari
jokesvari

போலித் தமிழ் தேசியத்தினை உரிமை கொண்டாடுவதற்கான செயற்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றைக்குமே கரம் கொடுக்காது என்று தெரிவித்துள்ள யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,  குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப்  பாரப்படுத்துவது தொடர்பான விடயத்தினை மாநகர சபையின் தீர்மானமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் நேற்று(20.08.2021) இடம்பெற்ற சபை அமர்வு தொடர்பாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாநகர சபை உருப்பினருமான திருமதி யோககேஸ்வரி பற்குணராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
 “முதலில் குறித்த தீர்மானம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, என்ற செய்தியை முற்றாக மறுக்கின்றேன்.உண்மையில் இந்தச் செய்தி ஊடகங்ளில் வெளியாகும் வரையில் இவ்விடயம்  தொடர்பாக அறிந்துகூட இருக்கவில்லை. நேற்று நடைபெற்ற சபை நிகழ்ச்சி நிரலிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. 
சபை அமர்வுகள் நிறைவடைந்ததாக முதல்வரினால் அறிவிக்கப்பட்ட பின்னரே, இந்தத் தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்று அறியமுடிகின்றது.


 எனவே இதனை மாநகர சபையின் தீர்மானமாக எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேவேளை இன்னுமொரு விடயத்தினை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.
 மாநகர சபையில் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான   சந்தர்ப்பத்தினை வழங்கும் நோக்குடன் மாத்திரமே, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், நல்லெண்ண அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. 


இதனை புரிந்துகொண்டு, மாநகரசபை  அமர்வுகளின் போது, மக்கள் நலச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறான நேர்மையான விடயங்களுக்கு மாத்திரமே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. தன்னுடைய ஒத்துழைப்பினை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.