கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கையை சபைப்படுத்த முடியுமா ? -அநுரகுமார

anura 1
anura 1

கெரவலப்பிட்டிய மின் நிலையம் உள்ளடங்கிய இயற்கை எரிவாயு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மொத்த செலவீனம் என்ன ? கேள்விமனுக்கோரலுக்கு அப்பால் இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதன் நோக்கம் என்னவென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார். 

நாட்டில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஊழல் நிறைந்த வேலைத்திட்டத்தை பஷில் ராஜபக்ஷ முன்னெடுக்கின்றார் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 27/2 இன் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கெரவலபிட்டிய மின் நிலையம் குறித்து அரசாங்கத்திடம் இந்த கேள்விகளை எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை இன்று நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நியூ போர்டஸ் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அல்லது செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கையில் கெரவலபிட்டிய மின் நிலையத்தின் 40வீத உரிமையும், களஞ்சிய உரிமையும், குழாய் வேலைத்திட்ட உருவாக்க உரிமையும், ஐந்து ஆண்டுகளுக்கான எரிவாயு வழங்கும் உரிமையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா? என்பதே எமது பிரதான கேள்வியாகும். 

சர்வதேச கேள்விமனுக்கோரல் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் அதற்கு மாறாக இந்த நிறுவனத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தை வழங்க காரணம் என்ன? 

கேள்விமனுக்கோரல் மூலம் விடுக்கப்பட்ட விலைப்பட்டியலை விடவும் குறைந்த விலையில் இந்த நிறுவனம் செயற்படுகின்றது என்ற கருத்தையும் அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கியுள்ளனர்.

ஆனால் கேள்விமனுக்கோரல் முடிய முன்னர் அதன் விலை பட்டியலை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு தெரிந்துகொண்டார்? அவ்வாறு கேள்விமனுக் கோரல் முடியாது விலை விபரங்களை தெரிந்துகொள்ள முடியாது.

அப்படியென்றால் இலங்கையில் கேள்விமனுக்கோரல் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அர்த்தமற்றது. ஆகவே இவற்றை கருத்திற்கொள்ளாது வழங்க இந்த நிறுவனத்தின் சிறப்பு என்ன?

அதுமட்டுமல்ல, இப்போது டீசலில் இயங்கும் நிலையங்களை இயற்கை திரவ எரிவாயுவிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சகல நிலையங்களுக்குமான எரிவாயுவை குறித்த அமெரிக்க நிறுவனம் வழங்கும் என கூறப்படுகின்றது. 

இது பாரதூரமான பிரச்சினையாகும். எரிவாயு அவசியம் என்றால் தேவைக்கேற்ப கேள்விமனுக்கோரல் மூலமாக இவற்றை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு இருந்தும் இந்த நிறுவனத்திற்கு அதற்கான உரிமத்தை வழங்குவது ஏன்? இந்த மொத்த அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குமான மொத்த செலவீனம் எவ்வளவு? 

அது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா ? எமக்கு தெரிந்த வரையில் இது ஐந்து பில்லியன் செலவில் உருவாக்கப்படுவதாக தெரிய வருகின்றது. 

இலங்கையின் மிக பெரிய முதலீட்டில் இது உருவாக்கப்படுவது என்பது தெரிகின்றது. கெரவலபிட்டிய மின் நிலையத்தின் மொத்த பெறுமதி என்ன?

இந்த திட்டங்களை முன்னெடுக்க உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதா ? அந்த உடன்படிக்கைகள் என்ன? அவற்றில் உள்ளடக்கம் என்ன? இவற்றை நாடாளுமன்றத்தில் சபைப்படுத்த முடியுமா? இல்லையென்றால் ஏன்? நாட்டின் தேசிய வளத்தை இவ்வாறு வழங்குவது என்றால் அது குறித்து எமக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

அமைச்சரவைக்கு வழங்கப்பட்ட காரணிகளாக உடன்படிக்கையிலும் உள்ளது என்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதில் தெரிவிக்க வேண்டும். 

இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய வேலைத்திட்டம். ஆனால் மிகப்பெரிய ஊழலில் இது முன்னெடுக்கப்படுகின்றது என்பதே எமது நிலைப்பாடு. இதன் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.