நாட்டைக் கட்டியெழுப்ப பொறுப்புடன் செயற்பட வேண்டும் – துமிந்த சில்வா

r duminda silva
r duminda silva

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கண்டி – கொக்கனகல, மல்கமன்சந்தி, பூஜாப்பிட்டி, மேல்கித்துல்கல ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் துமிந்த சில்வாவின் தலைமையில் நேற்று (25) கையளிக்கப்பட்டது

இந்நிலையில், ஹரிஸ்பத்துவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட துமிந்த சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு அதிகார சபையாகும்.

அதில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

குறிப்பாகக் கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதனை நான் அறிந்திருக்கிறேன்.

இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் 70,000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சிறந்த சேவையாற்றுபவர்களையே பொதுமக்கள் விரும்புவார்கள்.

நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா இல்லையா என்பது தெரியாது.

எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.